அதிர்கின்றது கொழும்பு அரசியல்! – மைத்திரி பக்கம் தாவுகின்றார் எஸ்.பி.?

thissa athanayaga
thissa athanayaga

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.பி. திஸாநாயக்க, நல்லாட்சியின்போது மைத்திரிபால சிறிசேனவின் விசுவாசியாகவே செயற்பட்டார். இதனால்தான் பொதுத்தேர்தலில் தோல்வியுற்றிருந்தாலும் தேசியப்பட்டியல் ஊடாக எஸ்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அமைச்சுப் பதவியையும் மைத்திரி வழங்கினார்.

எனினும், மைத்திரிபாலவுக்கு நெருக்கடி ஏற்பட்டு, ராஜபக்ச அலை மீண்டும் உருவானபோது, மைத்திரியை கைவிட்டு ராஜபக்சக்களுடன்  எஸ்.பி. சங்கமித்தார். இதனால் சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டார்.

2020இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ‘மொட்டு’ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தாலும் எஸ்.பிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகூட வழங்கப்படவில்லை. அரசியலில் நெடுநாள் அனுபவம் கொண்ட – பல அமைச்சுப் பதவிகளை வகித்த எஸ்.பிக்கு மாவட்ட தலைவர் பதவி மட்டும் வழங்கப்பட்டமை பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

அதேபோல் அண்மைக்காலமாக அரசியன் செயற்பாடுகளையும் அவர் விமர்சித்து வருகின்றார். எனவே, விரைவில் அவர் சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பியுடன் செல்வதற்கு சில மாகாண சபை உறுப்பினர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.