சீன தடுப்பூசி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்

download 6 4
download 6 4

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளின் வினைத்திறன் ஆய்வு மட்டத்திலேயே காணப்படுகின்ற நிலையில் அதனை நாட்டு மக்களுக்கு வழங்குவதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமாயின் அதற்கு கொவிட் தடுப்பூசி தொடர்பில் ஆராயும் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் இலங்கையிலுள்ள சீனப் பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் தற்போது இலங்கை பிரஜைகளுக்கும் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை வினவிய போது, அதன் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரத்னசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக் கொண்டுள்ள போதிலும் அதன் வினைத்திறன் எவ்வாறானதாக அமையும் என்பது இன்னும் ஆய்வு மட்டத்திலேயே காணப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த தடுப்பூசிகள் இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது 1000 இலங்கை பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் வினைத்திறன் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்து அதன் உண்மை தன்மை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.