அரச அதிகாரிகள் விலைபோய்விட்டார்கள் என்கின்றனர் கிளிநொச்சி விவசாயிகள்

farmer 2
farmer 2

ஆட்டிறைச்சியுடன் சாராய விருந்துபசார சலுகைக்கு அரச அதிகாரிகள் விலைபோயுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளே இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். முரசுமோட்டை பகுதியில் பெரும்போக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியின் உத்தரவுக்கு அமைவாக 6 ஏக்கர் செய்கை நிலம் அழிக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையை ஆராய இன்று ஊடகவியலாளர்கள் சிலர் கிளிநொச்சி கமநல சேவைகள் திணைக்களத்திற்கு சென்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பெரும்போக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தியிடம் வினவியபோது தெளிவான விடயங்களை வழங்க மறுத்தார்.

ஊடகவியலாளர்களாக அல்லாது பொதுமகனாக விளக்கம் வழங்கப்பட வேண்டும் எனவும், விளக்கத்தை தெளிவாக வழங்குமாறும் அவரிடம் வினவினர். ஆனாலும், தனது அரச வேலைக்கு இடையூறாக காணப்படுவதாகவும், தனக்கு விளக்கமாக விடயங்களை வழங்க முடியாது எனவும் பெரும்போக உத்தியோகத்தரான சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முறைப்பாடடு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டி உள்ளதா என அங்கிருந்த உத்தியுாகத்தர்களிடம் வினவியபோது அவ்வாறான எதுவும் இல்லை என தெரிவித்ததுடன், குறித்த பெரும்போக உத்தியோகத்தரிடம் வினவினர். குறித்த புத்தகம் “அங்கேதும் இருக்கும் எடுத்து அவர்களிடம் கொடுங்கள்” என அசாட்டாக பதிலளித்துள்ளார். இதன்போது புதிதாக எவ்விடயமும் குறிப்பிடப்படாத குறிப்பு புதிய புத்தகம் ஒன்று உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டதுடன், அப்புத்தகத்தில் ஊடகவியலாளர்கள் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

கிளிநொச்சியில் சிறுபோக செய்கை இடம்பெற்று வரும் நிலையில் காலபோகம் மேற்கொண்டவர்களே சிறுபோகம் செய்ய வேண்டும் என பெரும்போக உத்தியோகத்தரின் தன்னிச்சையான முடிவு விவசாயிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உண்மைநிலையை அறிய சென்ற போதே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக உண்மைநிலையை கண்டறிய முடிந்தது. இரண்டு போகங்கள் செய்யக்கூடிய காணியில் காலபோக செய்கை இவ்வருட ஆரம்ப பகுதியில் நிறைவடைந்தது. தற்போது சிறுபோக செய்கை ஆரம்பித்துள்ள நிலையில் காலபோகம் செய்தவர்களே சிறுபோக செய்கையும் மேற்கொள்ள வேண்டும் என கமநல சேவைகள் திணைக்களம் கட்டுப்பாடு ஒன்றை தாமே முன்வைத்துள்ளது.

ஆனாலும் குறித்த வரையறையானது மாவட்ட விவசாய திட்டமிடல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும், அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பெரும்போக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார்.

காலபோக செய்கை மேற்கொள்வதற்காக பல காணி உரிமையாளர்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு குத்தகைக்கு வழங்கியும், உறவினர் நண்பர்களிற்கு வழங்கியும் உள்ளனர். இதனால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறுபோக செய்கையை காணி உரிமையாளர்கள் மேற்கொள்ளவோ அல்லது வேறு நபர்களிற்கு குத்தகைக்கு வழங்கவோ முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் முரசுமோட்டை பகுதியில் காணி உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட 6 ஏக்கர் செய்கை மேற்கொள்ளப்பட்ட காணி குறித்த பெரும்போக உத்தியோகத்தரினால் காலபோகம் செய்த நபருக்கு அழித்து விதைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் காணி உரிமையாளர் 119 ஊடாக காவல்துறையினருக்கு அவசர அழைப்பு விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள முயன்றபோது குறிதத் காணியை அழித்து விதைப்பதற்கு பெரும்போக உத்தியோகத்தர் சுந்தரமூர்தியே அறிவுறுத்தியதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக பாதிக்கப்பட்ட விவசாயி குறிப்பிடுகின்றார்.

குத்தகைக்கு வழங்கப்பட்ட நபருடனான ஒப்பந்தமானது சட்டத்தரணி ஊடக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது எனவும், காணி உரிமையாளரான தாம் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டபோது பெரும்போக உத்தியோகத்தர் கடமையை செய்வதற்கு இழுத்தடிப்பு மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.

கமநல சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு ஆடு அடிச்சு, சாராயத்துடன் விருந்து வைத்த சம்பவம் தொடர்பில் தான் அறிந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவிக்கின்றார்.

காலபோக செய்கை மேற்கொண்டவர்கள்தான் சிறுபோக செய்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெரும்போக உத்திபோகத்தர் குறிப்பிட்ட போதிலும், குறித்த கூட்டறிக்கையின் குறிப்பினை காண்பிக்குமாறு கேட்டபோது அக்குறிப்பு தமக்கு கிடைக்கவில்லை என்று சாட்டுப்போக்கினையே அவர் கூறினார்.

குறித்த விடயத்தின் உண்மைத்தன்மையை அறிவதற்கு மாவட்ட செயலகத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சிலரை நேரடியாக சந்தித்து வினவியபோது, அவ்வாறான கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

பெரும்போக உத்தியோகத்தர் தொடர்பில் விவசாயிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை அறிந்து, விவசாயிகளிற்கு நேர்மையாக மேற்கொள்ளவேண்டிய சேவைகளை மேற்கொள்ளத்தவறியமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பொதுமக்களின் கருத்தை கேட்க தவறியமை, முறைப்பாட்டு புத்தகம் அல்லது முறைப்பாட்டு பெட்டியை அலுவலகத்தில் காண்பிக்க தவறியமை, எடுக்கப்படாத தீர்மானம் ஒன்றை நடைமுறைப்படுத்த முற்ப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளிநொச்சி கமநலசேவைகள் திணைக்கள பெரும்போக உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி மீது விவசாயிகளால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.