நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் மீட்பு!

image 2021 04 15 182922
image 2021 04 15 182922

பதுளை – ஹல்துமுல்ல, வெலிஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த தந்தை மற்றும் மகனது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹல்தமுல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிஓயாவில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கொழும்பு – மஹரகம பகுதியைச் சேர்ந்த நான்கு பேரைக் கொண்ட குடும்பத்தினர். சித்திரை புத்தாண்டு விடுமுறை தினத்தை முன்னிட்டு பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளதுடன், மீண்டும் கொழும்புக்கு வந்து கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வெலி ஓயாவில் இவர்கள் நீராடிக் கொண்டிருக்கும் போது, திடீரென நீரின் வேகம் அதிகரித்துள்ளது. பின்னர் நால்வரும் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இருவரை அங்கிருந்த இளைஞர்கள் சிலர் காப்பாற்றியுள்ளனர்.

எனினும் தந்தையும் மகனும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டிருந்தனர். அதற்கமைய, அவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலையே தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், இன்று வெள்ளிக்கிழமையே அவர்களிருவரதும் சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

சம்பவத்தில் 52 வயதுடைய தந்தையும், அவருடைய 17 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.