அன்னை பூபதிக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

IMG 0017 1
IMG 0017 1

இந்திய இராணுவத்தினை வடகிழக்கிலிருந்து வெளியேறுமாறு கோரி சாகும் வரையில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு,கல்லடி,நாவலடியில் உள்ள சமாதியில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று காலை நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 1988.03.19 ஆம் திகதியிருந்து 1988.04.19 வரையில் உண்ணா விரதமிருந்து அன்னை பூபதி உயிர் நீத்திருந்தார்.

அன்னையர் முன்னணி என்னும் அமைப்பின் ஊடாக இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தியிருந்தார்.

இன்று காலை 6.00மணியளவில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை தவிசாளர் சர்வானந்தா,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான ஜெயா மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அக வணக்கமும் செலுத்தப்பட்டது.

இதேநேரம் குறித்த நிகழ்வு நிறைவடைந்து நிகழ்வுக்கு வந்தவர்கள் அங்கு காத்தான்குடி காவல்துறையினர் நீதிமன்ற தடையுத்தரவுடன் அப்பகுதிக்கு வருகை தந்தனர். எனினும் நிகழ்வு நிறைவடைந்து அங்கு வந்தவர்கள் சென்றதன் காரணமாக காவல்துறையினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.