மறைந்த சேவையாளர் சிவஞானசோதிக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி!

u 1
u 1

சிறிலங்காவின் அமைச்சரவை அமைச்சுக்களின் செயலாளராக இருந்து, தமிழர் தாயகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட வே. சிவஞானசோதி ஐயாவுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 38 ஆவது அமர்வு இன்று (22) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்ற போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரு நிமிடம் அவரை நினைந்து அக வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து இரங்கல் உரைகள் இடம்பெற்றன. தவிசாளர் த.நடனேந்திரன், உறுப்பினர்களான ந.பொன்ராசா, வி.உமாபதி, சி.பாலகிருஸ்ணன், கு.குணசிறி, தே.ரஜீவன், செ.பரமசிவம்பிள்ளை உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.

இதன்போது, அவர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணிகள் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்தனர். அவரின் அறிவுரைகளுக்கு இணங்க அவரோடு இணைந்து பணியாற்றிய உறுப்பினர் வி.உமாபதி, சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களிடம் இருந்து தமிழர் தாயகத்திற்கான அபிவிருத்திகளைப் பெறுவதில் சிவஞானசோதி ஐயா முன்மாதிரியாகச் செயற்பட்டார் என உறுப்பினர் பொன்ராசா தெரிவித்தார்.

தற்போது உயர் பதவிகளில் இருக்கும் தமிழ் அரச உத்தியோகத்தர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் என்ன நினைப்பார்கள் என அச்சத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில் துணிந்து நின்று தமிழர் பிரதேசங்களுக்கான அபிவிருத்தி குறித்த அமைச்சரவைப் பத்திரங்களை நேர்த்தியாகத் தயாரித்து நிதிகளைப் பெற்றுக்கொண்டவர் இவர் எனவும் உறுப்பினர் பொன்ராசா சுட்டிக்காட்டினார்.

இவர் பல அமைச்சுக்களுக்கு செயலாளராக பணியாற்றிய காலத்தில் வடக்கு கிழக்கு பெரும் அபிவிருத்தியைக் கண்டது எனக் கூறிய அவர், இனிமேல் இவர்போன்ற ஒருவரைக் காண்பது அரிது எனவும் கூறினார்.

வலி.மேற்கு பிரதேசத்திற்கு அவர் ஆற்றிய பணிகளையும் தமது உரையில் பொன்ராசா பட்டியற்படுத்திக் கூறினார்.