மஹிந்தவிற்கும் பொதுஜன பெரமுன கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை

download 2 1
download 2 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

இம்முறை இடம் பெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் இடம்பெறும் அரசியல் கட்சி கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் முறைமை, ஆளும் கட்சிக்கும், பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பிரதான 10 பங்காளி கட்சி தலைவர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பிரதான தரப்பினர் பிரதமருடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள்.

அரசியல் கட்சி கூட்டத்தில் அரசாங்கத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அரசியல் உறுப்பினர்கள் கலந்துக் கொள்வார்கள்.

ஆனால் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்ற பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி தலைவர் கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட உறுப்பினர்கள் உட்பட பல புதிய முகங்கள் பங்குப்பற்றியிருந்தன.

இதன் காரணமாக அன்று இடம்பெற்ற அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனை தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

மாகாணசபைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில விடயங்களுக்கு 11 பங்காளி கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் கட்சி தலைவர் மட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ அரசியல் கட்சி தலைவர்களிடம் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடைமுறையில் காணப்பட்ட நெருக்கடிகளை காட்டிலும் தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கம் பாரதூரமானதாக காணப்படுகிறது. ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தவது சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் கட்சிக்கும் கூட்டணியின் பங்காளி கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வை வெகுவிரைவில் பெற்றுக்கொள்வது அவசியமாகும். முரண்பாடுகளினால் அரசாங்கம் பலவீனமடைய கூடாது.

பிரதமர் தலைமையில் இடம் பெறும் பேச்சுவார்த்தை தீர்மானமிக்கதாக அமையும் என எதிர்பார்க்கிறோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.