புலுட்டுமானோடையில் பௌத்த விடயங்களை முன்னெடுக்கக் கூடாது – சாணக்கியன்

FB IMG 1619951181127
FB IMG 1619951181127

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈரளக்குளம்- கவர் மலை கிராமத்தின் எல்லையில் புலுட்டுமானோடை காட்டுக்குள் அமைந்துள்ள சுமார் 2,200 வருடங்கள் பழமையான பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்திற்கு களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் அரச அதிகாரிகள் , தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் , பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து நேற்றைய தினம் நானும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் அவ்விடத்திற்கு சென்றிருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் , சீ.யோகேஸ்வரன் , ஞா.சிறிநேசன் , முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா , உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் , பிரதித் தவிசாளர்கள் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள் , படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும் , இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது , அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடாது , அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும். எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.