ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் ஆதரித்தமை பெருமையாகும் – பொன்சேகா

sf
sf

ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்கிய வேளையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் என்னை ஆதரித்தனர் என்றால் அவர்களுக்கு என்மீது இருந்த நம்பிக்கையே காரணமாகும். அதற்கு பெருமைப்பட வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் குறித்த நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் கொரோனா பரவல் நிலைமைகள் குறித்து நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்தது வருகின்றோம். முதலில் எதிர்க்கட்சி தலைவர் இந்த நிலைமைகளை சபையில் எடுத்துக் கூறினார். ஆனால் அப்போது ஆளும் கட்சியினர் சிரித்துக்கொண்டனர். இப்போது நிலைமை என்னவாகியுள்ளது என்பது சகலருக்கும் தெரிந்திருக்கும். 700 க்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டினை முடக்குவது குறித்தும், தடுப்பூசி ஏற்றுவது குறித்தும் பேசிய வேளையில் நகைப்பிற்கு எடுத்துக்கொண்டனர். மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்காது, பாணி பருக்குவது குறித்தும், மூட நம்பிக்கைகளில் முட்டிகளை ஆற்றில் போடும் நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் இன்று ஜனாதிபதியும் ஆளும் கட்சியினரும் தடுப்பூசி குறித்து பேசுகின்றனர். இப்போதாவது இந்த உண்மைகளை விளங்கிக்கொண்டமை நல்ல விடயமென்றே கருதுகின்றேன்.

மேலும் கொவிட் நிலைமைகளில் இராணுவத்தின் பங்களிப்பை நான் எப்போதும் விமர்சித்ததில்லை. அவர்களின் ஒத்துழைப்புகள் அவசியம். அதேபோல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றால் அதற்கு பிரதான காரணம் நாம் கடன்காரராக மாறியமையேயாகும்.

சீனாவிடம் அளவுக்கு அதிகமான கடன்களை பெற்றுக்கொண்டு அதனை கட்டமுடியாத நிலைமை உருவாகியுள்ளது. அதேபோல் தேசிய பாதுகாப்பு என்பது மக்களை எமாற்றுவதல்ல, உணர்வுடன் அதனை கையாள வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்ல. ஈஸ்டர் தாக்குதலில் நொவ்பர் மௌலவி மீதி சுமத்தி தப்பித்துக்கொள்ள நினைகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதேபோல் தாக்குதல் குறித்த உண்மையான குற்றவாளிகளை கண்டறியாது, எம்மை அடக்கவே நினைகின்றனர்.

கரன்னாகொட 11 மாணவர்களை கொலை செய்தமை குறித்து நான் சபையில் கூறியவுடம் தமிழினியின் புத்தகத்தை கூறி நியாயப்படுத்தினர். இராணுவம் என்பதற்காக, யுத்தம் செய்தமைக்காக கொலைகளை செய்ய முடியாது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கொலையாளியான சுனில் ரதானயாகவினை நியாயப்படுத்தி அமைச்சர் வீரசேகர சபையில் பேசுகின்றார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்பதற்காக எதனையும் கூறிவிட முடியாது. வீரசேகரவிற்கு வேலை பெற்றுக்கொடுத்ததும், அவருக்கான பாதுகாப்பை கொடுத்தவன் நான். அந்த நன்றியை மறந்து இன்று எம்மை குற்றவாளியாக்குகின்றனர். அதேபோல் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்ததில் என்ன தவறுள்ளது.

யுத்தத்தை சரியாக செய்த காரணத்தினால், என்மீது நம்பிக்கை வைத்ததால், தமிழ் மக்கள் இராணுவத்தை வெறுக்காத காரணத்தினால் என்னை தமிழர்கள் ஆதரித்தனர்.அதற்கு பெருமைப்பட வேண்டும். மாறாக அவர்கள் செய்தது தவறென கூற முடியாது. நீதிமன்ற காரணிகளையே நான் சபையில் கூறினேன். அது விளங்காது முட்டாள் போன்று கதைக்கக் கூடாது என்றார்.