தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஸ்ரீகாந்தாவின் வாழ்த்துச் செய்தி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 copy
625.500.560.350.160.300.053.800.900.160.90 copy

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், எதிர்நிற்கும் பாரிய சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக சந்தித்து,இந்தியத் திருநாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் புதியதோர் பொற்காலத்தை தங்களின் ஆட்சிக்காலத்தில் விரைந்து உருவாக்கிட எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.ஸ்ரீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டும் ஜனநாயகப் போர்வாளாக தங்கள் சீரிய தலைமை வெற்றியீட்டும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

இலங்கைத் தமிழர் அனுபவித்துவரும் இன்னல்கள் துடைத்தெறியப்பட வேண்டும் என்பதில் நீங்கள் தொடர்ந்து காட்டி வந்திருக்கும் உறுதி மிக்க ஈடுபாட்டினை எமது மக்கள் நன்கறிவார்கள்.

35 ஆண்டுகளுக்கு முன்னரே, 1986ல், இலங்கையின் வெலிக்கடை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமை நிகழ்வுகளின் 3ம் ஆண்டு நினைவு தினத்தில், சென்னையில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் எங்களில் சிலர் விடுத்த அழைப்பை ஏற்று, நீங்கள் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு நிகழ்த்திய உணர்ச்சி பூர்வமான உரையினை இச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கின்றோம்.

முடிவின்றித் தொடரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நீதி நிலைநாட்டப்படுவதில், தமிழ்நாட்டு முதல்வர் என்ற அடிப்படையில் தங்களின் காத்திரமான பங்களிப்பை எமது மக்கள் உரிமையுடன் எதிர்பார்த்து நிற்கின்றார்கள்.
தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கும், இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் பரந்து வாழும் தமிழ் இனத்தின் உயர்வுக்கும் வழியமைத்த அரசியல் சகாப்தமாக தங்கள் ஆட்சிக்காலம் வரலாற்றில் தடம் பதிக்க மீண்டும் எங்கள் வாழ்த்துக்கள். என்றும் குறிப்பிட்டுள்ளார்