வடக்கு நா.உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும்! – மக்கள் கோரிக்கை

pcr
pcr

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முன்வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் பி.சி.ஆர். சோதனைகளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சமூக மட்டத்தில் தொற்றாளர்களை இனம் காண்பதற்கு சோதனைகளை அதிகரிக்கவேண்டும். ஒரே நாளில் அதிகளவான பி.சி.ஆர். மாதிரிகளைப் பெற்றுக் கொண்டாலும் அதனைச் சோதனைக்கு உட்படுத்துவதற்கு இரண்டு ஆய்வு கூடங்களே வடக்கில் உள்ளன.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உள்ள இயந்திரம் ஊடாக ஆகக் கூடியது ஆயிரம் மாதிரிகளையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் உள்ள இயந்திரம் ஊடாக ஆகக் கூடியது 300 மாதிரிகளையுமே ஒரே நாளில் சோதனைக்கு உட்படுத்த முடியும்.

வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டத்துக்கு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அது கிடைக்கப்பெறவில்லை.

பி.சி.ஆர். இயந்திரம் ஒன்றின் ஆகக் கூடிய பெறுமதி 45 லட்சம் ரூபா.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சி.வி.விக்னேஸ்வரனும், ஈ.பி.டி.பி. சார்பில் டக்ளஸ் தேவானந்தாவும் (அமைச்சர்), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் இ.அங்கஜனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோதராதலிங்கம் ஆகியோரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் காதர் மஸ்தானும், ஈ.பி.டி.பி. சார்பில் கு.தீலிபனும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ரிஷாத் பதியுதீனும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் அவர்களது சம்பளம், அமர்வுகளில் பங்கேற்பதற்கான கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட இதர கொடுப்பனவுகள் மூலம் ஆகக் குறைந்தது மாதாந்தம் 2 இலட்சம் ரூபா வரையில் பெற்றுக்கொள்கின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் 3 இலட்சத்து 47 ரூபாவை ஒதுக்கினால் வடக்கு மாகாணத்துக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள ஒரு பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய முடியும்.

எமது வாக்குகளால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள், எங்களின் பாதுகாப்புக்காக இதனைக் கொள்வனவு செய்து வழங்கவேண்டும் என்று வடக்கு மக்கள் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.