அரசுக்கு எதிராகத் தாதிமார்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்!

download 73
download 73

வைத்தியசாலைகளிலும் சிகிச்சை நிலையங்களிலும் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிந்துள்ள இந்தச் சூழ்நிலையில், அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிமார்கள், அரசுக்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதன்படி இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபடவுள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. மெதிவத்த ஊடகங்களிடம் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் தாதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் முறையான தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளனர் எனவும்,  இதனாலேயே தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனவும் மெதிவத்த குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானத்திற்கமைய இன்று காலை 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரையில் பணிகளில் இருந்து தமது சங்கத்தின் உறுப்பினர்கள் விலகியிருப்பார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.