‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலை உடனே ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுங்கள் – ஜனாதிபதி உத்தரவு!

01 21
01 21

இலங்கைக் கடற்பரப்பில் தீப்பற்றிய எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் மே மாதம் 09ஆம் திகதி அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து மே 19ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கப்பல் வந்தது முதல் நடந்த அனைத்து விவரங்களையும் துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விபரித்தார்.

அனர்த்தத்துக்குள்ளான கப்பல் மூழ்கும் அபாயம் இருக்கின்றது எனக் கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் குறைக்க கப்பலை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை என்பது அவர்களின் முன்மொழிவாக இருந்தது.

அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்குக் கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாலக கொடஹேவா, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்னம், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள், துறைமுகங்கள், சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, நாரா உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.