யாழ் பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

IMG 20210602 WA0019
IMG 20210602 WA0019

பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் ஊசி ஏற்றும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், ஏனைய பீடங்களில்500 பேருக்கும் மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இன்று காலை யாழ் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

IMG 20210602 WA0016
IMG 20210602 WA0016

இதற்கமைய இன்றும் நாளையும் இரு தினங்கள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

IMG 20210602 WA0023 1
IMG 20210602 WA0023 1

இதனையடுத்து, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2100 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதையடுத்து இன்றும் நாளையும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா தடுப்பூசி ஏற்றி ஆரம்பித்து வைக்க அனைத்துபல்கலைக்கழகப் பணியாளர்களும் தாமாக முன்வந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாட்டினை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதேவேளை தடுப்பூசியினை தவற விடாது மக்கள் விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் தான் தடுப்பூசி பெற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தடுப்பூசி என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு வரப்பிரசாதம் அதாவது அம்மை, போலியோ நோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு தடுப்பூசியினை பெற்றிருக்கின்றோம். கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இந்த கொரோனா என்று சொல்லப்படுகின்ற வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் அதன் தாக்கமானது உணரப்படுகின்றது.

அந்த வைரஸ் நம்மைத் தேடிவராது ஆனால் நாமாகவே அந்த வைரஸை பற்றி கொள்கின்றோம். அதுதான் உண்மை உலகில் கோடிக்கணக்கில் மக்கள் தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றார்கள் சிலர் தமது ஆயுளை இழந்துள்ளார்கள் எனவே இது ஒரு பாரிய ஒரு வைரஸ்நோயாக காணப்படுகின்றது .

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனவே இதற்கு தடுப்பூசி தான் ஒரே ஒருவழியாகும். அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. எனினும் யாழ் மாவட்டத்திற்கு சீனா நாட்டினுடைய தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசியே வழங்கப்பட்டுள்ளது.

IMG 20210602 WA0017
IMG 20210602 WA0017

எமது ஆய்வின் படி அது ஒரு சிறப்பான தடுப்பூசியாகவே காணப்படுகின்றது. எனவே யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் எமக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமையவே வழங்கப்பட்டுள்ளது .

விசேட அனுமதி பெற்று தான் தடுப்பூசி வழங்கப்படுகிறது.இன்று எமது பணியாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 2100 பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி இன்றிலிருந்து நாளை மாலை வரை வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது கிளிநொச்சி, வவுனியா, மருதனார்மடம் வளாகங்களில் கடமைபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது.யாழ் மாவட்ட பொதுமக்களும் இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தடுப்பூசியை இனிவரும் காலங்களில் பெறுவது மிகவும் கடுமையான விடயமாகும் ஏற்கனவே இந்திய தடுப்பூசி வந்தது எனினும் அது இரண்டாம் கட்டத்திற்குரியது வருகை தரவில்லை. எனவே இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இது வழங்குவதாயின் பல வருடங்கள் செல்லும் எனினும் யாழ் மாவட்டத்திற்கு அரசாங்கத்தினால் ஒரு தொகுதி தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை யாழ் மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேவேளை இந்த சைனோபாம் தடுப்பூசி தொடர்பில் பலவிதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இளைஞர்கள் தடுப்பூசி போட்டால் இனவிருத்தி பாதிப்பு ஏற்படும் என கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு ஒரு சம்பவமே இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் அந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்படுகின்றது. இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் இந்த ஊசியைப் போட்டால் கரு உருவாகாது என்றெல்லாம் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றது. அந்த விடயத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனினும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏன் போட வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் கூடுதலாக காணப்படும் என்பதனால்தான். ஆனால் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது.எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் குறித்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு எந்தவித தயக்கமும் காட்டாது நீங்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.