யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் பாரிய மணல் அகழ்வு இயற்கை மண்திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாக மக்கள் விசனம்!

IMG 0116
IMG 0116

யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான  உப்புமா வெளி பகுதியில் உள்ள காணியில் அனுமதி பெற்றும் அனுமதியின்றியும் பாரிய மணல் அகழ்வு  இடம்பெற்று வருகின்ற நிலையில் இயற்கை மண்திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாகவும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமானால் தாம் பாரிய இடர்களை சந்திக்க நேரிடும்  எனவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

19e3a5ac 9723 48d4 bce4 59f53adc7cc0

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
கடந்த 2018 ஆம் ஆண்டு யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் உள்ள இயற்கை மணல் திட்டுகள் நிறைந்த 32 ஏக்கர் காணியை முல்லைத்தீவை சேர்ந்த நபர் ஒருவருக்கு பராமரிப்பை மேற்கொண்டு காணியை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு அங்கிருக்கும் மணல் திட்டுக்களை சமபடுத்தி தென்னை ,கயூ போன்ற மரங்களை நடுகை செய்துதருமாறும் இதன்போது பெறப்படும் மணலினை ஒரு லோட்டுக்கு   5000 ரூபாவை ஆயர் இல்லத்துக்கு செலுத்தி   பெற்றுக்கொள்ளவேண்டும் என    மேற்கொள்ளபட்ட ஒப்பந்தத்தின் பலனாக கடந்த மூன்று வருடங்களாக குறித்த காணியில் மண் ஏற்றி விற்பனை செய்யும் நடவடிக்கையில் குறித்த நபர் ஈடுபட்டுவந்துள்ளார்.

IMG 0204

குறித்த அனுமதி தொடர்பிலான ஒப்பந்தம்  பிரபல சிரேஸ்ட  சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் கடந்த 2018 இல் கைச்சாத்தாகியுள்ளது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த சிலவருடங்களாக மண் எடுத்து செல்லப்பட்ட நிலையில் உப்புமாவெளி உடுப்புக்குளம் மக்கள் மண்ணகழ்வுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்து பல்வேறு தரப்பினரிடம் முறையிட்ட போதிலும் தொடர்சியாக மணல் அகழ்வு இடம்பெற்றுவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த காணியில் தொடர்ந்தும் மணல் அகழப்பட்டு வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கப்படும் நடவடிக்கை இடம் பெற்றுவந்ததால் இரு தரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு புறம்பாக  நிலமட்டத்தின் கீழாக மணல் அகழ்வு செல்லும் அபாயம் தொடர்ந்திருக்கிறது.

IMG 0205 1

சம்பவம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து உப்புமாவெளி கிராம மக்கள்  போராட்டங்களை முன்னெடுக்க முயற்சித்த வேளை  சில தலையீடுகளால் இடைநிறுத்தப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை முன்வைத்த இளைஞர்களை சட்ட நுணுக்கம் தெரிந்த  சிலர் தொடர்புகொண்டு அவர்களின் பதிவுகளை நீக்க வலியுறுத்தியதாகவும் தெரியவருகிறது.

கடந்த  காலப்பகுதியில் கிராம மக்களாலால் தொடர்சியாக பிரதேச  ஊடகவியலாளர்களிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் படி மணல் அகழ்வின் ஆபத்துத் தொடர்பில் அந்தக் காணிக்குப் பொறுப்பான பங்குத்தந்தையர்களை ஊடகவியலாளர்கள் சிலர் அணுகியபோதிலும் தமது சம்மதத்துடனனேயே மணல் அகழ்வு நடைபெறுவதாக அவர்கள் பதில் வழங்கியிருக்கின்றனர்.

IMG 0208


இவ்வாறு மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் குறித்த மணல் அகழ்வு காரணமாக கடந்த காலங்களில் சுனாமி பேரலை ஏற்ப்பட்ட போது தமது பகுதிகளில் நீர் உள்ளே வராது பாதுகாத்த பாரிய மணல் அரண்கள் அழிவடைவதை பிரதேச மக்கள் பல தரப்பினரிடமும் தெரிவித்தனர்


இந்நிலையில் இந்த விடயம் தொடர்ந்து பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும் கலந்துரையாடப்பட்ட நிலையில் இறுதியாக இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் காதர் மஸ்தான் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் குறித்த இடங்களில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு தொடர்பில் நேரில் பார்வையிட்டு குறித்த இடத்தில் இடம்பெறப் போகின்ற ஆபத்தை காரணம் காட்டி குறித்த பணிகளை நிறுத்துமாறு தெரிவித்திருந்தனர் இது தொடர்பில் பிரதேச செயலகம்  காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலமாக குறித்த விடயங்களை சுட்டிக் காட்டி இருந்தனர்

IMG 0206

இந்த நிலையில்  கடந்த 12.01.2021 அன்று  ஆயர் இல்லத்தினைச் சேர்ந்த பொறுப்புவாய்ந்த அடிகளார் ஒருவர் சம்பவ இடத்தினைப் பார்வையிட்ட வேளை தம்மால் வழங்கப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி  சமூகத்துக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய திருச்சபையின் பெயரால் ஒரு பகுதியின் இயற்கை வளம் அழிக்கப்படுகின்ற அவல நிலை ஆயர் இல்லத்தின் அதி உயர் தரப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஆயர் இல்லம் பிரதேச செயலாளருக்கும், புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணியகத்திற்கும் மணல் அகழப்படும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் தாம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்திக்கொள்வதாகவும் ஆயர் இல்லத்தின் சட்ட தரணி  மதுரநாயகத்தின் ஊடக ஒப்பந்தத்தை முடிவுறுத்தும்   கடிதம் அனுப்பியும்  நேரிலும் சந்தித்து விளக்கமளித்திருக்கிறது.

பிரதேச செயலர், மாவட்டச் செயலருக்கு தகவல் வழங்கிய நிலையில் மாவட்டச் செயலர் ,பிரதேச செயலர் ஆகியோர் புவிசரிதவியல் திணைக்களத்துக்கு மண்ணகழ்வு நடவடிக்கையை நிறுத்துமாறு அனுமதியை இரத்து  செய்யுமாறும் 15.03.2021 அன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.பிரதேச செயலரால் எழுதப்பட்ட கடிதத்தின் பிரதிகள் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உட்பட்டவர்களுக்கு கூட அனுப்பப்பட்டிருக்கின்றன.

received 318431293328540

இதனிடையே மணல் அகழ்வினை நிறுத்துவதற்காக புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணியகத்தின் கொழும்பு அலுவலகத்துக்கும் ஆயர் இல்லம் ஒப்பந்தத்தை முடிவுறுத்தும் கடித்தை அனுப்பியுள்ளது.மேற்குறித்த முயற்சிகள் எவையும் யாழ்.மறைமாவட்டத்தின் உயர் பீடத்திற்கே கைகூடாத நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் யாழ்.மறைமாவட்ட ஆயர் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார்.


குறித்த ஆயர் இல்லத்தினால் ஒப்பந்தத்தை முடிவுறும் திகதி  அனுப்பப்பட்ட ஆவணங்கள்  உரிய வகையில் அவர்களுடைய ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகம் முடிவு செய்த நிலையில் அவர்கள் குறித்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கான மணல் அனுமதிப்பத்திரத்தை வழங்கியுள்ள நிலையில் ஆயர் இல்லம் எடுத்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் குறித்த பகுதியில் ஒப்பந்தம் மூலமாக இடத்தை பெற்றுக் கொண்டவர்கள் உரிய சட்ட அனுமதியோடு தொடர்ந்து மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்

IMG 0106

பொது மக்களின் எதிர்ப்பினை காரணம்காட்டி குறித்த மணல் அகழ்வை நிறுத்துமாறு பல்வேறு தரப்புகள் கோரி காணி உரிமையாளர் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் சட்டத்தில் உள்ள சில விடயங்களை காரணம் காட்டி குறித்த பகுதியில் தொடர்ந்து மணல் அகழ்விற்கு குறித்த நபர்களுக்கு புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் பல்வேறு விஷனங்கள் வெளியிடப்பட்டுள்ளன

 இந்த நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சிலநாட்களாக ஆயர் இல்லத்தின் உத்தரவை மீறி காணியைவிட்டு வெளியேறுமாறு சட்டதரணியூடாக அறிவித்த பின்னரும்  அந்தக் காணியிலிருந்து மணல் வியாபாரியால்  மணல் அள்ளிச் செல்லப்பட்டுவருகின்றது. இவ்வாறான நிலைமைகள் கிராம அலுவலர் பிரதேச செயலாளர் ஊடாக காவற்துறையினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் உரிய சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக மணல் அகழ்வு இடம்பெறுகின்ற விடயத்தினை குறித்த பகுதியில் காவலரண்களை அமைத்து சோதனை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் ஆயர் இல்லத்தின் அனுமதியோடு குறித்த ஆயர் இல்லத்தின் காணியில் மேற்கொள்ள பட்டுவரும் மண் அகழ்வு தொடர்பில் அறிக்கையிடுவதற்காக இன்று (3) சென்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை ஒப்பந்தம் மேற்கொண்ட மண் விற்பனை செய்யும் நபர் காணியில் நுழைய விடாது தடுத்ததோடு தாம் அனைத்து அனுமதிகளோடும் மண்ணகழ்வில் ஈடுபடுவதாகவும் கடந்த வருடங்களில் மண்ணுக்காக 66 இலட்சம் ரூபா பணம் ஆயர் இல்லத்துக்கு செலுத்தி உள்ளதாகவும் ஒப்பந்தம் முடியும்வரை காணியில் மண் அகழவுள்ளதாகவும் ஒப்பந்தக்காரரின் பராமரிப்பில் காணி உள்ளதால் உள்ளே செல்ல அனுமதிக்கமுடியாது என தெரிவித்துள்ளார்.

IMG 0106 1

இந்த நிலையில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான குறித்த காணியில்  அனுமதியோடு மண்ணகழ்வில் குறித்த நபர் ஈடுபட்டுவரும் அதேவேளை அதனை அண்டிய ஆயர் இல்லத்தின் ஏனைய காணிகளில் சட்டத்துக்கு புறம்பாக பிரதேச மண் கொள்ளையர்களால் மண் அகளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 
குறித்த நபர் மணல் அகழ்வு மேற்கொள்கின்ற இடத்திற்கு அண்மையாக சுமார் 5000க்கும் மேற்பட்ட டிசம்பர் லோட்  மணல் எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படாது கனரக இயந்திரங்கள் மூலம் குவிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படாமல் காணப்படுகின்றது


இவ்வாறு மக்களுக்கு மிகவும் பாதிப்பை உண்டுபண்ண கூடியவாறு குறித்த பகுதியில் உள்ள மண் திட்டுக்களை சட்டபூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அழிப்பதற்கு அனுமதித்துள்ள ஆயர் இல்லத்தின் மீது பொதுமக்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்


இதனால் சுனாமி போன்ற பேரிடர் காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நீரை உட்புகவிடாது பாதுகாத்த இயற்கை மணல் திட்டுக்கள் அழிவடைந்து செல்வதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த ஆயர் இல்லத்திற்கு சொந்தமான இந்தக் காணியில் இடம்பெறுகின்ற சட்டபூர்வமான சட்டவிரோதமான அனைத்து மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி எதிர்காலத்தில் இயற்கையால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்க கூடிய வகையில் மக்களுக்கு ஆபத்தை உண்டு பண்ணக்கூடிய குறித்த செயற்பாட்டை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த மணல் அகழ்வினால் கிடைக்கும் வருமானத்தை கருதாது மக்களின் எதிர்காலத்தை கருதி இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஆயர் இல்லம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்