யாழ். மாவட்ட காவல்துறை பிரதானியாக பிரியந்த லியனகே நியமனம்!

download 3 1
download 3 1

யாழ். மாவட்ட காவல்துறை பிரதானியாக பிரதிக் காவல்துறைமா அதிபர் பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறைமா அதிபரின் பரிந்துரைகள் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் காவல்துறை பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரியந்த லியனகே, ஆணைக் குழுவின் காலம் நிறைவுற்ற பின்னர் காவல்துறைதலைமையகத்தில் பொறுப்புக்கள் எவையும் வழங்கப்படாது கடமையில் அமர்த்தப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே அவர் தற்போது யாழ். பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிக் காவல்துறைமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் காவல்துறைபிரிவு ஆரம்பிக்கப்பட்ட போது, பாதாள உலகத் தலைவர்களை மையப்படுத்திய செயற்பாடுகளுக்கு தலைமை வகித்து அந்த காவல்துறை பிரிவின் முதல் பணிப்பாளராகவும் பிரியந்த லியனகே கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில் இதுவரை யாழ். பிரதிப் காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய மகேஸ் சேனநாயக்க காவல்துறை நலன்புரி பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் காவல்துறை மா அதிபராக இடமாற்றப்பட்டு கொழும்பு அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அம்பாறை மாவட்டத்துக்கும் புதிதாக பிரதிப் காவல்துறைமா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அம்பாறை பிரதிக் காவல்துறைமா அதிபராக கடமையாற்றிய ஏ. கருணாரத்ன மேல் மாகாண குற்றத் தடுப்பு விவகாரங்களை கையாள்வதற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதன் பிரகாரம் அம்பாறையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் எஸ். எம்.வை. செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.