கொரோனா குறித்து நாடாளுமன்றத்தில் ரணில் பேசுவார்-ஆசுமாரசிங்க

asu marasinghe
asu marasinghe

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் வாய்திறக்காததன் காரணமாகவே எமது கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகப் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்தோம் என அக்கட்சியின் உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள காணொளியில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய நாடாளுமன்றம் அதற்குரிய கடமையைச் செய்வதற்குத் தவறியிருக்கிறது. ஏனைய உலகநாடுகள் அந்நாடுகளின் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ஜப்பான், ஈஸ்ரேல், மலேசியா போன்ற நாடுகளின் அமைச்சரவை அந்தந்த நாடுகளின் சுகாதாரப்பிரிவினரிடம் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியும் அமைச்சரவையும் சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

அதேவேளை இந்த நெருக்கடியை வெற்றிகொண்ட நாடுகள் எவையும் வைத்தியர்களிடம் மாத்திரம் பொறுப்பைக் கையளித்துவிட்டு, வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவில்லை. எனவே எமது நாட்டின் நெருக்கடிநிலைக்கு அமைச்சரவை பொறுப்புக்கூறவேண்டும்.

உலகின் அனைத்து நாடுகளிலும் அந்நாடுகளின் நாடாளுமன்றங்களே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையாகப் போராடுகின்றன. மாறாக அனைத்திற்கும் ஒவ்வொரு ஆணைக்குழுக்களை நியமிப்பதன் ஊடாக மாத்திரம் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்டிவிடமுடியாது.

அதேபோன்று நாடாளுமன்றத்தின் கட்சித்தலைவர்கள் அவ்வப்போது சந்தித்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவேண்டும். ஐக்கிய தேசியக்கட்சிக்குரிய தேசிய பட்டியல் ஆசனத்திற்கு எமது கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க வருவது குறித்து எதிர்க்கட்சியின் சிலர் அதீத ஆர்வத்தைக் காண்பிக்கிறார்கள்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் பேசாததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க உடனடியாகப் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்று எமது செயற்குழுக்கூட்டத்தில் தீர்மானித்தோம் என்று குறிப்பிட்டார்.