கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம்

IMG 20210608 094824
IMG 20210608 094824

கடமையில் ஈடுபடாத கிராமசேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த கிராம சேவையாளர் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதயில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் கிராம சேவையாளரே இவ்வாறு உரிய சேவையை வழங்குவதில்லை என பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகம் தருவதில்லை எனவும், தமது தேவைகளிற்காக அலுவலகம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். சுமார் 3 மாதமாக குறித்த கிராம சேவையாளர் அலுவலக கடமையை முறையாக மேற்கொள்வதில்லை எனவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் இன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை அலுவலக கடமை என குறிப்பிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும் 10 மணிவரை அவர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த முறைப்பாட்டை அடுத்து பிரதேச செயலாளர்கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும் கிராம சேவையாளரின் கடமை நேரம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் முறைப்பாட்டை உறுதி செய்து கொண்டார்.

தொடர்ந்து பிரதேச செயலாளர் குறிப்பிடுகையில்,
பொதுமக்களால் குறிப்பிடப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இன்றைய தினம் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அதற்கு அமைவாக இன்றைய தினம் அவர் கடமைக்காக அலுவலகத்தில் இருந்திருக்கவில்லை. அவரை தொலைபேசி ஊடாக கேட்டபொழுது தான் வீட்டில் நிற்பதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் குறித்த முறைப்பாடானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவையாளரை விசாரணைகளிற்காக பிரதேச செயலகத்திற்கு அழைத்துள்ளோம். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.