பொலன்னறுவை சிறுநீரகவியல் வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

69962298 2290919707692503 5665999875691511808 o
69962298 2290919707692503 5665999875691511808 o

பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , 2015ஆம் ஆண்டில் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது முன்வைத்த கோரிக்கையின் பேரில், சீன அரசாங்கத்தின் முழுமையான அன்பளிப்பாக இந்த வைத்தியசாலைக் கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே உரிய பண்டையகால கட்டிடக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதி, 16 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ளது. இதற்காக, 1200 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், இதன் நிர்மாணப் பணிகள், 30 மாதங்களில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நவீன வசதிகளுடன் கூடிய 05 சத்திர சிகிச்சைக் கூடங்களைக் கொண்டுள்ள இந்த வைத்தியசாலையில், 200 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 கட்டில்கள், குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் 100, சிறுநீரக நோய் சிகிச்சைக் கட்டிடத் தொகுதி, நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய பரிசோதனை நிலையம், ஆய்வுகூடம், கதிரியக்க மற்றும் சிடி ஸ்கேன் சேவைகள் மற்றும் நவீன கேட்போர்கூடம் என்பவையும் இதில் அடங்கும். 300 வாகனங்களை நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிடம் மற்றும் வைத்தியசாலை பணிக்குழாமைச் சேர்ந்த அனைவருக்குமான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது வைத்தியசாலையின் பணிகள் குறித்து, பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் என்.கே.சம்பத் இந்திக்க குமார விபரித்தார். வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்புப் பிரிவு, சத்திர சிகிச்சை நிலையம், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட வைத்தியசாலை கட்டிடத் தொகுதியை, ஜனாதிபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.