யாழ். பல்கலைக்கழகத்துக்கு தானியங்கி இயந்திரம் புலம்பெயர் தமிழரால் அன்பளிப்பு

529419db f43f 4032 9864 8d7b0753b7b5
529419db f43f 4032 9864 8d7b0753b7b5

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்தின் தேவைகருதி, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி இந்த அன்பளிப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரத்தை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, இன்று 17 ஆம் திகதி பி.ப. 3 மணிக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, இயந்திரத்துக்கான ஆவணக் கோப்பை, மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரவிராஜ் உடன் இணைந்து ஒட்டுண்ணியல் துறைத் தலைவர் மருத்துவர் ஏ.முருகானந்தனிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் திருமதி கலாமதி முருகானந்தன், உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன், மருத்துவபீட சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். ரமேஷ் மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வு கூடத்தின் மருத்துவ ஆய்வு கூடத் தொழில் நுட்பவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரத்தை அன்பளிப்பாக வழங்கிய புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் மற்றும் அதனை ஏற்பாடு செய்த யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி ஆகியோர் நிகழ்நிலை வழியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்