சம்பிக்க கைதுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை!

2 yy5
2 yy5

சம்பிக்க ரணவக்கவின் கைதுக்கும் அரசாங்கத்துக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விடயமே தவிர அரசியல் பழிவாங்கல் அல்ல என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்யும்போது அதுதொடர்பில் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கவில்லை என்றால், அது தவறாகும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். சம்பிக்கவின் கைதுக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது சட்டத்தை நிலைநாட்டும்போது மேற்கொள்ளப்படும் சம்பவமாகும். அரசியல் ரீதியில் அவரை கைதுசெய்யுமாறு நாங்கள் தெரிவிக்கவுமில்லை, அவரை சுற்றிவளைக்கவும் இல்லை. வேறு யாரையும் இவ்வாறு சுற்றிவளைக்குமாறு நாங்கள் தெரிவிக்கவும் மாட்டோம். ஏனெனில் இது அரசாங்கத்தின் வேலையல்ல.

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சட்டத்தை செயற்படுத்த இடமளிக்கவில்லை. தற்போது அந்த நடவடிக்கைகள் எந்த தடையுமின்றி இடம்பெறுகின்றன. அதனால்தான் கடந்த காலங்களில் இடம்பெறாத விடயங்கள் தற்போது விரைவாக இடம்பெற காரணமாகும்.
சம்பிக்க ரணவக்கவின் கைது பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்திருக்கின்றது. சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சிக்காரர்.

அவர் சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பாக இவ்வாறு தெரிவித்ததற்கு மற்றவர்களை கைதுசெய்த சந்தர்ப்பங்களில் அவ்வாறு தெரிவித்ததில்லை. என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்யும் அதுதொடர்பாக சபாநாயகருக்கு அறிவுறுத்தவேண்டும். அறிவுறுத்தாமல் கைதுசெய்வது தவறாகும் என்றார்.