மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் அரசுசார் பிரதிநிதிகள் கவனம் கொள்வதில்லை

vlcsnap 2021 06 20 22h42m05s434
vlcsnap 2021 06 20 22h42m05s434

மேய்ச்சற்தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மேய்ச்சற்தரைப் பிரச்சினை மிகப் பேசுபாருளாக இருந்த விடயம். அதிலும் மட்டக்களப்பில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை பெரிய பிரதேசமாகவும், கடும் பிரச்சினைக்குரிய பிரதேசமாகவும் இருந்தது. கடந்த காலங்களில் நாங்கள் பல தடவைகள் இந்தப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றோம். மட்டக்களப்பில் அதிக மாடுகளை மேய்க்கின்ற மேய்ச்சற்தரையாக இது காணப்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் அத்துமீறிச் சேனைப்பயிர்ச்செய்கை செய்பவர்களை வெளியேற்றுவதற்காக பண்ணையாளர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம்.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதிக்கு முன்னதாக இங்கு சேனைப்பயிர்ச்செய்கை செய்பவர்கள் அனைவரும் வெளியேறி மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்தவதற்கு விடவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு கடந்த மே மாதம் 12ம் திகதி தவணையிடப்பட்டு அதன்போது பயிர்ச்செய்கையாளர்கள் இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களா என்று உறுதிப்படுத்தும் படியாகவும் அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிக்கப்பட்டது. மே 12ம் திகதி நாட்டின் அசாதாரண நிலைமையினால் வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் இப்பிரதேசத்தில் மீண்டும் அத்துமீறிய சேனைப்பயிர்ச்செய்கைக்கான நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரியபப்படுத்தியதற்கமைவாக அந்த நிலைமையை வாழக்காளிகளாக இருக்கும் நாங்கள் நேரில் வந்து பார்வையிட்டோம்.

இந்கு வந்து பார்க்கும் போது இங்கு நீதிமன்ற உத்தரவுக்கமைவாக முற்றாக சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் வெளியேறியதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே பள்ளப் பிரதேசங்களில் தற்போதும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவதானித்தோம். அதற்கும் மேலாக எதிர்வரும் மாரி காலத்தில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை நாங்கள் அடுத்துவரும் வழக்குத் தவணையிலே எமது சட்டத்தரணிக்கூடாக நீதிமன்றுக்குத் தெரியப்படுத்த இருக்கின்றோம்.

தற்போதைய இந்த அரசின் காலத்தில் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தினூடாகவும் தீர்க்க முடியுமா என்ற சந்தேகமே ஜதார்த்த பூர்வமாக எங்கள் மத்தியில் இருக்கின்றது. ஏனெனில் இந்த அரசு திட்டமிட்டு இந்த வேலையை ஆளுநருக்கூடாக ஊக்குவிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கு தமிழ் மக்களை எந்தளவுக்கு அடிமைப்படுத்த, துன்புறுத்த முடியுமே அந்தளவிற்குத் துன்புறுத்துகின்றது இந்த அரசு.

மேய்ச்சற்தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. மாவட்டத்தில் நிலவுகின்ற தொல்பொருள், மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் இவர்கள் இருவரும் தலையிடாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும்.

ஆனால், நாங்கள் அவ்வாறிருக்க மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசினால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநியாயங்களை எப்போதும் தட்டிக் கேட்கும் என்று தெரிவித்தார்.