யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

srilanka jaffna
srilanka jaffna

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாப் பெருந்தொற்று இடர் காலத்தில் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அரசியல் தரப்பினர் உரிமை கோரும் செயற்பாடு தற்போதும் இடம்பெற்று வருகின்றது எனக் கொடையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு, யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் மற்றும் வர்த்தக சங்கம் ஆகியன நிவாரணப் பொதிகளைக் கையளித்திருந்தன. அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் வழங்கிய நிவாரணப் பொதிகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் நூறு வீதம் பிரித்து வழங்கப்பட்டிருந்தன. அதேபோன்று வர்த்தக சங்கம் வழங்கிய பொதிகள் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் 50 வீதம் பிரித்து வழங்கப்பட்டிருந்தன.

இவற்றுக்கான பயனாளிகள் பட்டியலுடன் யாழ். மாவட்ட அரசியல்வாதி ஒருவரின் உதவியாளர்கள் பிரதேச செயலகங்களை அணுகியுள்ளனர். சில பிரதேச செயலர்கள் அந்தப் பட்டியலுக்கு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்ட பயனாளிகளின் விவரங்கள் மேற்படி அரசியல்வாதியின் அலுவலகத்தினரால் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

பின்னர் நிவாரணங்கள் பெற்றுக்கொண்ட பயனாளிகளுக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுக்கப்படுகின்றது. நாங்கள்தான் உங்களுக்கு நிவாரணம் வழங்கச் சொன்னோம். கிடைத்ததா?” என்று அரசியல்வாதியின் அலுவலகத்திலிருந்து அழைப்பு எடுப்பவர்கள் கதைக்கின்றனர். நிவாரணங்களை தம்மால் வழங்க முடியாதவிடத்து அந்த உதவி தம்மால் கிடைக்கப்பெற்றது என்ற தோற்றப்பாட்டை காண்பிக்க முயல்வதாக கொடையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், சில இடங்களில், நிவாரணங்கள் வழங்கப்படும்போது அரசியல்வாதியின் பிரதிநிதிகளும் அந்த இடத்தில் சமூகம் கொடுக்கலாமா எனவும் கேட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான அதிகாரிகள் அதற்கு இடம்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.