அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கட்சி

download 4 3
download 4 3

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட 35 அரசியல் கைதிகளில் 16 பேர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி இருப்பதை நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். இவர்களை விட, மேலும் 19 தமிழர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் சிலரின் மேன்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். என்பதே நீண்ட காலம் கோரிக்கையாக இருந்து வருகின்றது என சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவருமான ந.ஸ்ரீகாந்தா தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்…

இந்த கைதிகளின் விடயத்தில் குற்றங்கள் வேறுபட்டிருந்தாலும், அவற்றின் பின்னணி ஒன்றேதான். எனவே இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவதே நீதியானதாகும். மேன்முறையீடு செய்திருப்பவர்களின் விடயத்தில், மேன்முறையீடுகளை மீளப் பெறுவதன் ஊடாக பொது மன்னிப்புக்கான தடையினை அகற்ற முடியும்.

இதேவேளையில், வழக்கு விசாரணையை நீண்ட பல வருடங்களாக சந்தித்து வந்திருக்கும் 38 கைதிகளைப் பொறுத்தமட்டில், வழக்குகளை சட்ட மாஅதிபர் கைவிடுவதன் ஊடாக அவர்கள் விடுதலை செய்யப்பட முடியும்.
இதே போல, குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படாமல் சில வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும், 116 கைதிகளுக்கு பிணை வழங்கப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அல்லது அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 42 வருட காலத்தில், இந்த பொது மன்னிப்பு ஒரு நல்ல ஆரம்பமாகும். இந்த பொது மன்னிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் அனால் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கைதிகளில் சிலருக்காவது விடுதலை கிடைத்துள்ளது என்பதை வரவேற்பதே பொருத்தமானதாகும்.

இதே வேளையில் எஞ்சியிருக்கும் மொத்தம் 173 கைதிகளின் விடுதலைக்காக அக்கறையுள்ள அனைவரும் தொடர்ந்து தீவிரமாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.