அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறி வலி கிழக்கு தவிசாளருக்கு அச்சுறுத்தல்

nirosh
nirosh

யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.20 மணிக்கு தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியின் பழைய தபால் கந்தோர் ஒழுங்கை ஊடாக பயணித்த போது, மத்திய மாகாண இலக்கத்தகடு கொண்ட செகுசு பிக்கப் (சிபிபிபி – 0595) வாகனத்தில் ஒரு குழுவினர் எச்சரித்தவாறு தவிசாளரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர்.

முந்திச் சென்றவர்கள் முன்னர் தனியார் நெடுந்தூர பேருந்து தரிப்பிடமாக பாவிக்கப்பட்ட வளாகத்திற்குள் தவிசாளரின் வாகனம் நிறுத்தப்பட்டதுடன் அவ் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தவிசாளார் என்ன பிரச்சினை எனக்கேட்டபோது, அவர்கள் தூஷண வார்த்தைகளை உபயோகித்தவாறு தவிசாளரை நோக்கி வந்தனர்.

தவிசாளார் தொலைபேசியில் அவசர காவல்துறை (119) இலக்கத்திற்கு முயற்சித்தபோது, தாம் அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டிட உடைவு கல் ஒன்றினை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்த போது அவ்விடத்தில் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளார். மக்கள் ஒன்றுகூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களை படம் பிடித்தபோது தாமும் படம் பிடித்தவாறு விலகிச்சென்றனர்.

இந்நிலையில் இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் காவல் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக காவல்துறை முறைப்பாட்டினைப் பதிவுசெய்துளளார். முறைப்பாட்டில்  (சிபிபிபி – 0595)   இலக்க வாகனத்தில் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிவர சி.சி.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமென்றில் இவ் அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.