கிழக்கில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்

IMG 20210722 WA0004
IMG 20210722 WA0004

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய கூட்டு முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (21) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரன் மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் ஆகியோரிடையே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்திய இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமை குறித்த நோக்குகள் தொடர்பாகவும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களை பரிமாறியுள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய உயர் ஸ்தானி கராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைமை அதிகாரி எல்டோஸ் மத்தியூ புண்ணூஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.