சிறுமி ஹிசாலினியின் சரீரம் புதைக்கப்பட்டுள்ள மயானத்துக்கு பாதுகாப்பு!

Photo 5
Photo 5

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த சிறுமி ஹிஷாலினியின் சரீரம் புதைக்கப்பட்டுள்ள டயகம தோட்ட பொதுமயானத்திற்கு காவல்துறை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுக்கமைய அவரது சரீரம் எதிர்வரும் நாட்களில் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த சிறுமி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை குழு இன்று டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய, சிறுமியின் தாயாரிடம் இன்று பிற்பகல் காவல்துறை வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்தமை தொடர்பில் ரிசாட்டின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோருடன், அதே வீட்டில் மற்றொரு பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான ரிசாட்டின் மைத்துனரும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் தடுப்பு விதிகளுக்கு அமைய தற்போது அவர்கள் கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுமி மரணம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு நீதிவான், சிறுமியின் சரீரத்தை மீண்டும் தோண்டி எடுத்து, மீள பிரேத பரிசோதனை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.