கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி; மக்கள் பாதிப்பு

IMG20210729082446
IMG20210729082446

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட18, 474 பேருக்கு இன்று (29) காலை முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகிறது.

இன்று காலை 6 மணி முதல் கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்காக மக்கள் காத்திருந்த போதும் காலை 08.30 மணி முதலே தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள். இதனால், மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

தடுப்பூசியேற்ற வந்த மக்கள் தெரிவித்ததாவது ,

ஒரே இடத்தில் வைத்து தடுப்பூசி போடுவதென்றால் காலை 7 மணிக்கே அந்தப் பணியை தொடங்கியிருந்தால் இங்கு பலரும் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அதே போல் தடுப்பூசியேற்றும் சுகாதார துறையினரின் எண்ணிக்கையையும் அதிகரித்திருக்க வேண்டும். வயதானவர்கள் பலரும் தூர இடங்களில் இருந்து அதிகளவான கட்டணங்களை போக்குவரத்துக்கு செலுத்தி வரும் நிலை உண்டு.

கிராம அலுவலர் பிரிவுகளை பிரித்து போட்டிருந்தால் தங்கள் அருகிலுள்ள நிலையங்களில் இலகுவாக தடுப்பூசியை பெற்றிருக்க முடியும். இப்படியான நிர்வாக குறைபாடுகளை சீர்செய்திருந்தால் மக்கள் இலகுவாக தங்கள் தடுப்பூசிகளை பெற முடியும். சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களும் சலிப்பில்லாமல் பணியாற்ற முடியும் என்றனர்.

இவ்வாறான கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதில் உள்ள நிர்வாகத் திட்டமிடல் குறைபாடுகள் யாழில் மீண்டும் ஒரு கொரோனாக் கொத்தணியை உருவாக்காதிருக்க வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.