செல்வச்சந்நிதி திருவிழாவிற்கான சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

36b83fb59c898ff575dd1a20e1a98c42 XL
36b83fb59c898ff575dd1a20e1a98c42 XL

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழா வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, காவல்துறையினர் உள்ளிட்டோரின் பங்களிப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு..

இந்த ஆண்டு பெருந்திருவிழாவை நடாத்துவதற்கு அனுமதியில்லை. ஆலய உள்வீதியில் மட்டுமே வழிபாடுகள் மற்றும் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வெளிப்புறச் சூழலில் எந்தவிதமான சமய நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சிறப்பு தனியார், அரச பேருந்துகள் சேவைகள் ஈடுபட அனுமதியில்லை என்பதுடன் வெளியூர் பக்தர்கள் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆலய சுற்றாடலில் வீதிகளில் மண்டகப்படி வைத்தல், பிரசாதம் வைத்தல், தாக சாந்தி, அன்னதானம் வழங்கல் என்பன முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையில் அங்கபிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், காவடி – தூக்குக் காவடி எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களின் போது கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத நிலை காணப்படுவதால் மேற்படி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலய சுற்றாடல் மற்றும் ஆலயத்தை அண்டிய பகுதியில் அடியவர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், கலை நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ஆலய சூழலில் இயங்கிவந்த கடைகள் மாத்திரமே தொடர்ந்தும் இயங்கிவர அனுமதிக்கப்படும். எனினும் இயங்கிவரும் கடைகளை விரிவாக்க அனுமதியில்லை.

ஆலய சூழலிலுள்ள வெற்றுக் காணிகளிலோ அல்லது கட்டடங்களிலோ கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதுடன் நடமாடும் வியாபாரமும் அனுமதிக்கப்படாது. இந்த ஆண்டு நீர்ப்பாசனத் திணைக்கள பாலத்துடனான போக்குவரத்து இடம்பெறாது. ஆலய வழிபாடுகளின் போது ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அடியவர்கள் நீண்ட நேரம் ஆலயத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். போக்குவரத்துப் பாதைகள் தடைப்படுத்தப்படும் போது பிரயாணிகள் மாற்றுவழிப் பாதையினைப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறியமை போன்றவற்றால் ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சுகாதார அமைச்சினால் காலத்திற்கு காலம் வெளியிடப்படும் சுகாதார சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் என்பவற்றுடன் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியினால் கூறப்பட்ட சுகாதார நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை செல்வச்சந்திநிதி ஆலய வழிபாட்டுக்காலங்களில் ஆலய சுற்றாடல்களில் அடியார்களை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.