வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் எழுமாறாக அன்டியன் பரிசோதனை!

IMG 20210819 WA0033
IMG 20210819 WA0033

வவுனியா வடக்கு புளியங்குளம் சமுர்த்தி வங்கியில் இன்றைய தினம் 12 பேருக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பிரதேச செயலாளர் மற்றும் சிலருக்கு நேற்றுமுன்தினம் சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் பிரதேச செயலாளர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினமும் பிரதேச செயலகத்தில் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த பிரதேச செயலகத்தில் பணிபுரியும் ஏனைய ஊழியர்களுக்கு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் எவருக்கும்  கொரோனா தொற்றுறுதி செய்யப்படவில்லை. வவுனியா நகர் இரண்டாம் குறுக்குதெருவில் எழுமாறாக இன்று 75 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை புளியங்குளம் கல்மடு கிராமத்தில் 35 குடும்பங்கள் உள்ளனர். அதில்19 குடும்பங்களில் எழுமாற்றாக இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேருக்கு  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை அடுத்து குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருப்பவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 
வவுனியாவில் அண்மைய நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.