ஆவணங்கள் அழிந்தமை ‘ஔடத மாஃபியா’ சூழ்ச்சியின் பெறுபேறாக இருக்கலாம் – சட்டமா அதிபர்

HM
HM

ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் ஆவணங்கள் அழிந்தமை நாட்டிற்கு ஒளடதங்களை இறக்குமதி செய்து சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் ஒளடத மாஃபியா சூழ்ச்சியின் பெறுபேறாக இருக்கக்கூடும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார். தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் அழிந்தமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த தரவு களஞ்சியத்தை இயக்கி செல்லும் பொறுப்பை எபிட் லங்கா டெக்னோலொஜிஸ் நிறுவனம் ஐந்து வருடகால ஒப்பந்த அடிப்படையில், பொறுப்பேற்றிருந்தது.

எனினும், அந்த நிறுவனத்தின் அசமந்தபோக்கு காரணமாக தரவுகள் அழிந்து போயுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையின் தரவுகளை பாதுகாப்பதற்கான உரிய திட்டங்களை அந்த நிறுவனம் வைத்திருக்கவில்லை என குறிப்பிட்ட அவர், அவற்றை பிரத்தியேகமாக பாதுகாப்பதிலிருந்தும் தவறியுள்ளதாக தெரிவித்தார்.

சில ஒளடத நிறுவனங்கள் ஒரே மருந்தினை வெவ்வேறு பெயர்களில் இறக்குமதி செய்வதாக குறிப்பிட்ட பிரதி மன்றாடியார் நாயகம், அந்த ஒளடதங்களின் விபரம் தொடர்பில், அழிந்து போன தரவு களஞ்சியத்திலே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும் நீதிமன்றில் குறிப்பிட்டார்.