தனிமைப்படுத்தல் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் பணம் மோசடி!

19 1513669670 borrow money
19 1513669670 borrow money

வெளிநாடுகளிலிருந்து வருகைதரும்போது, மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் விடுதிகளில் குறித்த காலப்பகுதிக்காக தம்மிடம் அதிகளவிலான பணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் ரெபிட் பிசிஆர் பரிசோதனைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கும் சூழலில் வெளிநாட்டு பயணிகள் இவ்வாறு விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

​தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் என நாளாந்தம் சுமார் 2,000 பேர் கட்டுநாயக்க விமானத்தின் ஊடாக நாட்டுக்கு வருகைதருகின்றனர்.

இவ்வாறு வருகைதருபவர்கள் இலங்கையர்களாயினும், பூரண கொவிட் தடுப்பூசி பெற்றிருந்தாலும், கொவிட் பரிசோதனை மேற்கொண்டு, அதன் பெறுபேறு கிடைக்கும் வரையில் அருகிலுள்ள விடுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனினும், 12 மணித்தியாலங்களுக்குள் பரிசோதனை கிடைக்கப்பெறுவதாகவும், இத்தகைய குறுகிய காலத்துக்கு விடுதியில் தங்கியிருப்பதற்காக தம்மிடம் அதிகளவிலான பணம் வசூலிக்கப்படுவதாகவும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு விடுதியில் அதிக பணத்தை செலுத்தவேண்டியேற்பட்ட சிலர் ஹிரு தொலைக்காட்சியின் ஹிரு சிஐஏ பிரிவுக்கு தகவல் வழங்கினர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில், “அதிகாலை 4 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தடைந்தோம். 5.30 மணிவரை எமது பயணப்பொதிகள் கிடைக்கும்வரை காத்திருந்தோம். 6 மணியளவில் பேருந்தில் ஏறினோம். எமது பயணப்பொதிகளை வேறொரு பாரவூர்தியில் ஏற்றினர். பின்னர் எம்மை பேருவளைக்கு அழைத்துசென்றனர்.

காலை 9.30 மணியளவிலேயே பேருந்தில் இருந்து இறங்கினோம். விடுதியில் தனி அறைக்காக 12,500 ரூபாவும், இரண்டு பேருக்கான அறைக்கு 14,000 முதல் 15,000 ரூபா வரை அறவிடுவதாகக்கூறினர். எனினும், ஒரு அறையில் நுழைந்தபோது, அவை 3,000 – 4,000 ரூபாவை கூட வாடகையாக செலுத்த தகுதியற்ற அறைகள் என அனுமானிக்க முடிந்தது. எந்த வசதியும் இருக்கவில்லை.

காலை 10 மணிக்கு காலை உணவு வேண்டும் என கூறியபோது, காலை உணவு வழங்க தமது அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனினும், 12.30 மணிக்கு பகலுணவை தருமாறு கோரினேன். எனினும், 2 மணிக்கே அந்த உணவு கிடைத்தது.

மாலை 3 மணிக்கு கொவிட் பரிசோதனைக்கான மாதிரிகளை பெற்றனர். பிசிஆர் பரிசோதனைக்காக மேலும் 7,500 ரூபாவை பெற்றனர். மறுநாள் காலை 10 மணியளவிலேயே பெறுபேறு கிடைத்தது. வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு நியாயம் கிடைக்கும் என நாம் நம்பவில்லை” என்றார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரித்தபோது, ​​சுகாதாரத் துறை பரிந்துரைகளை வழங்கினால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் அதிவிரைவு பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ள வசதிகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், விமான நிலையத்திற்குள் இரண்டு ஆய்வகங்கள் உள்ளன.

இவை இலங்கையிலுள்ள மிகப் பெரிய ஆய்வுக்கூடங்களாகும். அவை ஒவ்வொன்றிலும் மூன்று மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் அறிக்கைகளை வழங்கும் திறன் கொண்டவை.

இத்தகைய செயற்திறன் மிக்க பி.சி.ஆர் சோதனைகள் நாட்டில் இருக்கும்போது, இலங்கைக்கு வரும் விமான பயணிகளை சுரண்டுவதற்கான இவ்வாறானதொரு திட்டமொன்று செயற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அவர்கள் வெவ்வேறு விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு, அவர்களிடம் வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. 

இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் இருக்கும் மோசடியாளர்கள் பயணிகளை சுரண்டுவதற்கு பல்வேறு மோசடி வழிகளை கையாண்டு வருகின்றனர் என்றார்.