நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

Rainning
Rainning

நாட்டின் சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.