”நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று” என்ற ஆவண படம் வெளியீடு!

Poster Thaainilam Film Premiere and Discussion
Poster Thaainilam Film Premiere and Discussion

தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று என்ற ஆவணப் படத்தின்  திரையிடல் நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அழைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த ஆவண படம் நீங்கள் முன்னர் ஒருபோதும் பார்த்திராத பல காட்சிகளையும், செவ்விகளையும்  கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் இலங்கையில் தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து  நேரடியாக பதிவு செய்யப்பட்டவை ஆகும்.  இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்ந்து ‘இலங்கையின் இனம்சார்ந்த நில ஆக்கிரமிப்பு முறைகள், விளைவுகள் மற்றும் தமிழ் நில பாதுகாப்பு’ என்ற இணையவழி கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. 

இந்த முக்கியமான ஆவண படத்தின் முதன்மை காட்சி வெளியீடு நிகழ்நிலை, வலையொளி  ஊடாக செப்டம்பர் 25 ம் திகதி 2021  சனிக்கிழமை அன்று மாலை ஐந்தரை மணிக்கும் ( யாழ்ப்பாணம் – திருகோணமலை), லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணிக்கும், டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணிக்கும் ஆரம்பமாகி  நான்கு மணித்தியாலங்களிற்கு இடம்பெறும்.

Webinar ID: 841 5154 5684

Passcode: TH2021

இலங்கை தீவில் தமிழ் மக்களின் தாயகமான வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் நோக்கத்துடனும், எமது வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அடையாளம் ஆகியவற்றை இல்லாமல் செய்யும் நோக்கத்துடனும் இலங்கை அரசாங்கங்களினால் கடந்த 70 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த  இனவாத அடிப்படையிலான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தற்போது  மிகவும் தீவிரம் அடைந்துள்ளன. எமது நிலங்களை பாதுகாப்பதற்கும் இழந்த நிலங்களை மீட்பதற்கும் இயலாத அளவுக்கு இலங்கையில் தமிழ் மக்களின் நிலைமை மிகவும் ஆபத்தானதாகவும் கடினமானதாகவும் மாறியிருக்கின்றது. நிலத்துடன்,  நாம் எமது வாழ்வையும்,  3000 வருடங்களுக்கு மேற்பட்ட எமது அடையாளத்தையும் மிகவும் வேகமாக நாம் இழந்து வருகின்றோம். ஆகவே, எமக்கு இருக்கக்கூடிய எல்லா வாய்ப்புக்கள், வளங்கள், பலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த நில  அபகரிப்புக்கு எதிராக போராடவேண்டிய மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்.  உலகம் முழுவதிலும் அடக்குமுறைகள்,  அநீதி மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக குரல்கொடுக்கும்  செயற்பாட்டாளர்கள்  இந்த நில ஆக்கிரமிப்பை இலங்கை அரசாங்கம் நிறுத்துமாறும் எங்களிடம் களவாடப்பட்ட நிலத்தை மீள ஒப்படைக்குமாறும் குரல் எழுப்ப வேண்டும்.   

இந்த பின்னணியில் நான் இந்த நிலஆக்கிரமிப்பு தொடர்பான ஆவண பட திரையிடல் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்விமான்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளேன். இலங்கை அரசாங்கம் எங்களிற்கு எதிராக முன்னெடுக்கும் இந்த கொடுரமான நில ஆக்கிரமிப்பு குறித்து தமிழ் மக்கள் மத்தியிலும் சர்வதேச சமூகத்தின்  மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இதனை முன்னெடுக்கின்றேன்.

இந்த நிகழ்வினை முதுபெரும் அரசியல்வாதியும், எனது பெரு மதிப்புக்கும் கௌரவத்துக்கும் உரிய முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவருமான கௌரவ ஆர். சம்பந்தன் அவர்கள் என்னுடன் கூட்டாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுவார். 

தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு – கிழக்கில் கடந்த 70 வருடங்களாக தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கங்கள் முன்னெடுத்துவரும் நில அபகரிப்பு பற்றிய நேரடியான காட்சிகளும், அவை தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மற்றும் சர்வதேச புலமையாளர்கள், ஆய்வாளர்கள், இலங்கையின் முன்னாள் காணி ஆணையாளர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் கருத்துக்களும் இந்த ஆவண படத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஆவண படத்தை தமிழ் மக்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும். அதேவேளை, குழு விவாதத்தில் இந்தியாவில் 30 வருடங்களுக்கு மேலாக மக்களின் நில உரிமைகளுக்காக போராடும் பிரபல்யம் மிக்க செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார் அம்மையார், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்  ராமு மணிவண்ணன், அமெரிக்காவின் ஓக்லாந்து நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டால் ஆகியோர் இந்த குழு விவாதத்தில் கலந்துகொள்கின்றனர். 

இந்த குழு விவாதத்தை தொடர்ந்து ஈழத்தை பூர்வீகமாக கொண்ட கனடாவின் புகழ்பெற்ற இசை கலைஞரான ஷான் வின்சென்ட் டி போலின் இசை நிகழ்வு ஒன்று 20 நிமிடங்களுக்கு இடம்பெறும். 

ஆவண படம் திரையிட்ட பின்னர், அந்த படம் தொடர்பிலான ஆய்வு ரீதியான கலந்துரையாடல் ஒன்றில் இளையோர்கள் கலந்துகொள்வார்கள் . இந்த கலந்துரையாடலில் பிரித்தானியா, தமிழ் நாடு, அமெரிக்கா , ஐரோப்பா ஆகிய இடங்களில் இருந்து இளையோர்கள் கலந்துகொள்வர். 

அனுப்புக்குரிய தமிழ் மக்களே, எதிர்வரும் சனிக்கிழமை அன்று இந்த நிகழ்வுக்கு உங்களின் நேரத்தை தயவுசெய்து ஒதுக்கிவைத்து கலந்துகொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.