நாளை 21ம் 22ம் திகதிகள் அதிபர் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

20211020 125634
20211020 125634

நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.

இன்று மதியம் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்…
 அரசியல்வாதிகளுடனும் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும் 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும் அதிபர்களும் ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக பணியை பகிஸ்கரித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே 21,22ம் திகதி பாடசாலைகள் அனைத்திற்கும் அதிபர் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பகிஸ்கரித்தால் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிஸ்கரிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

 அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர் அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.

இந்த இடத்திலேயே 21ம்22ம் திகதிகளில் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு 25ஆம் திகதி நாங்கள் பாடசாலைக்கு செல்ல தயாராகவுள்ளோம். அரசாங்கம் பல்வேறு விதமான கபட நாடகங்கள் மேற்கொண்டு ஆசிரியர் அதிபர்களுக்கு எதிராக சமூகத்தை திருப்பும் வகையிலே ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த அரசாங்கம், பெற்றோர் மாணவர்கள் உடன் அதிபர் ஆசிரியர்களை மோதவிட்டு பிரச்சனையை திசை திருப்பலாம் என்று சிந்திக்கின்ற நிலையில் தொழிற்சங்க ரீதியாக நாங்கள் முடிவு எடுத்து அரசாங்கம் அறிவித்த திகதிகளில் பாடசாலைக்குச் செல்லாமல் நாங்கள் மாணவர்களின் கல்வியை வழங்கும் நோக்கில் எங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 25-ந்திகதி பணிக்குச் செல்வோம்.

21,22ம் திகதிகளில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது. 25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும் அப்பொழுது உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.