சிறைச்சாலைக்குள் தமிழ் கைதிகளை அச்சுறுத்தியதை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

image 20f0661afc
image 20f0661afc

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உரிய விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம் காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு காமினி அமரசேகர, யசந்த கோத்தாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் காவல்துறைமா அதிபரை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் 8 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

மனுதாரர்களை குறித்த சிறைச்சாலையிலிருந்து பிறிதொரு பொருத்தமான சிறைக்கு மாற்றுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தை உயர் நீதிமன்றம் பணித்துள்ளது.

மனுதாரர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இவ்வாறு சிறைச்சாலையினை மாற்றுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.