நவம்பர் மூன்றாம் திகதி இறந்தவர்களுக்காக மன்றாடுவோம் – வடக்கு-கிழக்கு ஆயர்கள்

fat
fat

போரினால் இறந்தோர் நினைவுதினத்தை நவம்பர் மூன்றாம் திகதி இறந்தவர்களுக்காக ஆலய வழிபாடுகளில் ஈடுபடுமாறு வடக்கு-கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.

மேலும் அவர்களது அறிக்கையில்….

இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் காரணமாக எமது மக்கள் அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது இன்னுயிரைப் பறிகொடுத்தோர், தங்களது உடன் பிறப்புக்களை, உறவுகளை இழந்தோர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்த வடுக்களால் அங்கவீனமுற்றோர், தொடர்ந்தும் எதுவிதமான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாது சிறையில் வாடுவோர் உடமைகளையும், இல்லிடங்களையும், காணிகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தோர், உயிர் அச்சுறுத்தல் காரணமாக அரசியல் தஞ்சம் தேடி புலம்பெயர்ந்தோர் என பலதரப்பட்ட மக்களை நாம் குறிப்பிடலாம். இறந்தோரை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் புரிகின்றமை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் வந்தாலும் இந்த முயற்சிக்குப் பல கோணங்களிலிருந்தும் பல தடைகள் இன்று வரையில் இருந்து வருகின்றமை நோக்கத்தக்கது.

இந்நிலையில் இலங்கைத் தேசத்தில் நடைபெற்ற கொடிய போரினால் இறந்து போனவர்களையும், அதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இறைவேண்டல் புரிய வடக்கு-கிழக்கு மாகாண கத்தோலிக்க ஆயர்களாகிய நாம் நவம்பர் மாத்தில் வருகின்ற மூன்றாம் சனிக்கிழமையைத் தீர்மானித்துள்ளோம். சனிக்கிழமையை போரினால் இறந்தவர்களுக்காக மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம். அன்றைய தினம் போரில் ஈடுபட்ட தரப்பினர், போரினால் இறந்துபோன மதத்தவைர்கள் அரசியல்வாதிகள், அரச பணியாளர்கள். பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து இறைவேண்டல் புரிய ஆயர்களாகிய நாம் அழைப்பு விடுக்கின்றோம். இதற்கெனக் குறிப்பிட்ட இடமும் இல்லை, நேரமும் இல்லை. அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளில் மக்கள் ஈடுபடவும் இல்லங்களில் தீபம் ஏற்றி இறைவேண்டல் புரியவும் அன்போடு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இவ்வழைப்பை வடக்கு-கிழக்கு கத்தோலிக்க ஆயர்களாக நாம் எம்மக்களுக்கு விடுத்தாலும் சமயங்களைக் கடந்து அனைத்து சமயத் தலைவர்களையும், தமிழ்கூறும் நல்லுலகையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம். எமது இந்த முன்னெடுப்பு வெற்றியளிக்க அனைவரது ஆதரவையும் வேண்டி முடிக்கின்றோம் எனவும் அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டனர்.