நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் முன் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்!

1527940181 073 2
1527940181 073 2

ஆசிரியர் – அதிபர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். எதிர்வரும் 9 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்-அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் சேவை சங்கத்தினர் இன்று நாவல-திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பள பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்த தொழிற்சங்க போராட்டம் தற்போது ஏனைய தொழிற்சங்கத்தினரது ஆதரவுடன் பலமடைந்துள்ளது.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் பாடசாலை கடமைக்கு சமுகமளித்துள்ளதுடன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தில் பெற்றோரும் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள்.தொழிற்சங்க போராட்டத்தை முடக்க அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, எமது தொழிற்சங்க போராட்டம் பலமடைந்துள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். எதிர்வரும் 9ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

சர்வாதிகாரமாக செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றுப்படுத்துவோம்.

சுபோதினி குழுவின் அறிக்கைக்கு அமைய ஆசிரியர்-அதிபர் சேவையில் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். கட்டம் கட்டமான சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

எதிர்வரும் 12 ஆம் திகதி வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம் என்றார்.