கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக ஆனந்த தேரர் நியமனம் பொருத்தமற்றது

download 15
download 15

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளமை பொருத்தமற்றது. நாட்டிலுள்ள அறிபூர்வமானவர்களைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும். அவ்வாறிருக்கையில் தொழிற்சங்கமொன்றின் தலைவராக மாத்திரமே காணப்படும் முருத்தெட்டுவே ஆனந்ததேரரின் நியமனம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெளிவுபடுத்துகையில்,

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும் போது கொழும்பு பல்கலைக்கழகம் முன்னணியானதாகும். அத்தோடு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகவும் கொழும்பு பல்கலைக்கழகம் காணப்படுகிறது.

எனவே இதற்கான வேந்தராக ஒருவரை நியமிக்கும் போது பல்வேறுபட்ட விடயங்களை அவதானத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களுக்கான வேந்தர்களை நியமிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய சர்வதேச வழக்கம் காணப்படுகிறது.

அதில் வேந்தரொருவருக்கான கடமைகள் எவை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், அவற்றில் புதிய விடயங்களை அறிமுகப்படுத்தல், நிர்வகித்தல் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்களில் வேந்தர் முன்னிலை வகிக்க வேண்டும்.

மேலும் பல்கலைக்கழத்தின் தரமானது சமூகத்தின் மத்தியில் நன்மதிப்பினைப் பெறும் வகையில் செயற்பட வேண்டும். தரத்தை உயர்த்துவதற்கு தனிப்பட்ட தியாகத்தை செய்யக் கூடியவராக இருக்க வேண்டும்.

நாட்டிலுள்ள அறிபூர்வமானவர்களைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்தில் காணப்பட வேண்டும்.

அவ்வாறிருந்தால் மாத்திரமே இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு உயர் தொழில் வாய்ப்புக்களுக்கு அனுப்பக் கூடியதாக இருக்கும். இவ்வாறான விடயங்களில் அவதானம் செலுத்தும் போது ஒரு தொழிற்சங்கத்தின் தலைவராக மாத்திரம் இருப்பதானது இந்த பதவிகுரிய பொருத்தமான தகுதி அல்ல.

முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு பதவிகளை வழங்குவதற்கு நாங்கள் விரோதமானவர்க அல்ல. ஆனால் பல்கலைக்கழக வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளமையை பொருத்தமற்றதாகவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கருதுகிறது என்று தெரிவித்தார்.