வி.பி.பவுண்டேசன் நிதியுதவியில் முல்லைத்தீவு வைத்தியசாலை ஊடாக இலவச அமரர் ஊர்திச் சேவைகள்!

received 198316922362946
received 198316922362946

முல்லைத்தீவு மாவட்டத்தில்  வறுமைக்கோட்டுக்கு உட்ப்பட்ட  மக்களுக்கு  உதவும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஊடாக இலவச அமரர் ஊர்திச் சேவைகளை வி.பி.பவுண்டேசன் என்கின்ற தனியார் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

இதன் ஒரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த இலவச அமரர் ஊர்திச் சேவைகளை வழங்கும் நிலையம் மற்றும் அதனோடிணைந்த வாகன தரிப்பிடத்துக்கான கட்டிடத்துக்கான அடிக்கல் இன்று (09)நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் முல்லைத்தீவு மாவட்ட  வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வாசுதேவ  வி பி பவுண்டேசன் ஸ்தாபகரும் இயக்குனருமான தெய்வேந்திரம் இந்திரதாஸ் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவடட செயலாளர் உள்ளிட்டவர்கள் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

குறித்த இலவச அமரர் ஊர்திச் சேவைகளை  தொடர்ச்சியாக  வழங்குவதற்கான வாகனம் அதன் சாரதி மற்றும் சாரதிக்கான சம்பளம் எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பு அனைத்தும் குறித்த  வி பி பவுண்டேசனால்  முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த  இலவச அமரர் ஊர்திச் சேவை ஊடாக வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக உடலங்களை கொண்டுவர வசதியற்றவர்கள் வைத்தியசாலையில் இருந்து உயிரிழந்தவர்களின் உடலங்களை வீடுகளுக்கு எடுத்து செல்ல வசதியற்றவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இந்த சேவையூடாக நன்மையடையவுள்ளனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்கி குறித்த திட்டத்தினை வறுமையான மக்கள் நன்மையடையக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்த சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட  வைத்தியசாலை குழந்தை இன்மை சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்துப் பொருள்களை வழங்குவதற்கும் குறித்த நிறுவனம் உடன்பட்டுள்ளது இதன் முதற்கட்ட மருந்துப்பொருட்களுக்கான நிதியுதவியும் இங்கு வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மருந்துப்பொருட்களை மூன்று மாதத்துக்கு ஒருதடவை தொடர்ச்சியாக கொள்வனவு செய்து வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

நிகழ்வில் வைத்தியர்கள் வி பி பவுண்டேசன் நிறுவன தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.