வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும்!

252751329 4676982439024723 517376627636973930 n
252751329 4676982439024723 517376627636973930 n

யாழ். – மானிப்பாய் – பொன்னாலை வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலங்கள் மற்றும் மதகுகளை சீராக புனரமைப்பதை உறுதிப்படுத்துமாறு வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலி.மேற்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் வலி.மேற்கு பிரதேச சபை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

மேற்படி வீதி புனரமைப்பின்போது மானிப்பாய்க்கும் சங்கானைக்கும் இடையே பெரியதும் சிறியதுமாக ஆறு வரையான மதகுகள் புனரமைக்கப்படாமல் காபெற் இடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மதகுகள் அடுத்துவரும் சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அவற்றைப் புனரமைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து மதகுகளும் புனரமைக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சபை உறுப்பினர் ந.பொன்ராசா பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரைக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

இதையடுத்தே, வலி.மேற்கு பிரதேச சபை வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு நேற்று (10) வியாழக்கிழமை கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.