புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மூலம் மாவீரர் நிகழ்வுகளுக்கு 14 பேருக்கு நீதிமன்றால் தடை!

46718951 2177878115812391 3601137285204017152 n
46718951 2177878115812391 3601137285204017152 n

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள 14 பேருக்கு நீதிமன்றால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

வருடம்தோறும்  கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய வருடந்தோறும் கார்த்திகை 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் பதின்நான்கு பேருக்கு கார்த்திகை 20 ஆம் திகதி முதல் 27 ம் திகதி வரை தமது காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான தடையுத்தரவை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் இன்று மாங்குளம் நீதிமன்றில் ஏஆர்/872/21 வழக்கினூடாக புதுக்குடியிருப்பு காவல்துறை பிரதேசத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்ப்பட்ட பகுதியில் பதின்நான்கு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான கணபதிப்பிள்ளை விஜயகுமார், கனகசுந்தரசுவாமி ஜனமேஜெயந், சிவபாதம் குகனேசன், சமூக செயற்பாட்டாளர்களான தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்), இசிதோர் அன்ரன் ஜீவராசா, பேதுருப்பிள்ளை ஜெராட்,தவராசா கணேஸ்வரன், சபாரத்ணம் யோகநாதன், ஜேசுதாசன் பற்றிக் யூட், வேலுப்பிள்ளை தியாகராசா, முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, பதின்நான்கு பேர் மற்றும் இவர்களது  குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.