படையினருக்கே வருமானத்தில் பெரும் பங்கு செலவிடப்படுகிறது – விக்னேஸ்வரன்

vikki
vikki

படையினருக்கே நாட்டுக்கான வருமானத்தில் பெரும் பங்கு செலவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது களை கொல்லிகள் மற்றும் கிருமிநாசினிகளையும் இறக்குமதி செய்ய அரசாங்கம் இடமளித்துள்ளது.

இவற்றை முன்னரே ஆராய்ந்தறிந்து உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருக்கலாம்.

அரசாங்கத்தின் நிச்சயமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு வரும் தைப்பொங்கல் காலத்தில் நட்டஈடு வழங்கப்படுமா?

படையினருக்கு போர் முடிந்த பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் பாதீட்டில் கூடிய நிதிகள் ஒதுக்கப்படுகின்றன.

308 பில்லியன் ரூபாவை ஒரு சிறிய நாடான இலங்கையின் பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது.

அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று கௌரவ நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறாகும்.

படையினரே நாட்டின் வருமானத்தில் கூடிய பங்கை விழுங்குகின்றனர்.

நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று கூறினால் மாத்திரம் அது ஏற்படாது.

சுய நிர்ணய உரிமைக்குரியவர்களுக்கு சமஸ்டி முறையான ஒரு அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.