சீரற்ற காலநிலையால் முல்லைத்தீவில் 70 குடும்பங்கள் பாதிப்பு!

wether 1
wether 1

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 70 குடும்பங்களைச் சேர்ந்த 189 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இன்று(26) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட தற்போதைய காலநிலை தொடர்பான புள்ளிவிபர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 அங்கத்தவர்கள் ஆனந்தபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகமாக இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 5குடும்பங்களைச் சேர்ந்த 19அங்கத்தவர்களும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 34அங்கத்தவர்களும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் 9குடும்பங்களைச் சேர்ந்த 18நபர்களும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு நபர்களும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் 37குடும்பத்தைச் சேர்ந்த 116 அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

இதேவேளை தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 15 நடுத்தர குளங்களும் 23 சிறிய குளங்களும் வான்பாய்ந்து வருகின்றன.

அத்தோடு மன்னாகண்டல் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கான நஸ்டஈடாக முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா பிரதேச செயலாளர் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இடைத்தங்கல் முகாமில் உள்ளவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடுகள் வழங்க அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.