வடக்கின் விவசாய, குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – சமல்

9c003038d74100aab9ff581f34bcf125 XL
9c003038d74100aab9ff581f34bcf125 XL

வடக்கிற்கான விவசாயத்திற்கும், பொதுமக்களின் குடிநீருக்குமான புதிய தேசிய நீர் வேலைத்திட்டங்களை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து வடக்கை மேன்படுத்துவோமெனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொடர்ச்சியான கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் நீர்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ சபையில் வாக்குறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26), கமத்தொழில் அமைச்சு மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தேசிய உணவு உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிப்பதும், அதன் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும், நுகர்வோருக்கு குறைந்த விலையில் விளைச்சல் பொருட்களை இலகுவாக பெற்றுக்கொடுக்கவும், விவசாய ஏற்றுமதியை அதிகரிக்கவும் அதன் மூலமாக சர்வதேச வருவாயை கூட்டவும் நடவடிக்கை எடுக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனர். 

இவ்வாறான பல பிரச்சினைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீர்வுகளை வழங்க அதற்கான வேலைத்திட்டமொன்றை உருவாக்க பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்ற மன்னார் மாவட்டத்தில் இரண்டு போகங்களிலும் விவசாயம் செய்யவும், குடிநீருக்கான நீர் வழங்கலின் கீழ் மல்வத்து ஓயா நீர் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். வெகு விரைவில் இதனை நிறைவுக்கு கொண்டுவருவோம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ள்ஸ் எம்.பி இது குறித்து தொடர்ச்சியாக எம்மிடம் கேள்வி எழுப்பிக்கொண்டுள்ளார். ஆகவே விரைவில் நீர்த்திட்டம் முழுமைப்படுத்துவோம்.

அதேபோல் கிழக்கு மாதுறு ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக ஆறாயிரம் விவசாய குடும்பங்களுக்கு 17 ஆயிரம் எக்டேயார் நிலப்பரப்பில் சேதன விவசாய ஏற்றுமதி வலயத்தை உருவாக்கவும் அதில் தமிழ் சிங்கள முஸ்லிம் என சகல இன இளைஞர்களையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

இதுவும் இன நல்லிணக்க வேலைத்திட்டமாகும். இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்றே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

“யாழ்ப்பணத்திற்கு கங்கை” வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும். தேர்தலுக்கு முன்னரே வடமராச்சி பகுதியில் இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிகளை எடுத்தோம். 

அதனை விரைவில் நிறைவு செய்வோம். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வேலைத்திட்டங்களை நிறுத்தியதை போன்று நாம் நிறுத்த மாட்டோம் என்றார்.