தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கிடையில் கப்பல் சேவை வேண்டும் – தமிழ்க் கூட்டமைப்பு

tna 1
tna 1

இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் நாடு திரும்ப விரும்புவதனால் தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

தாம் இதற்கு தயாராகவுள்ள நிலையில் இலங்கை அரச தரப்பிலேயே தாமதம் இருப்பதாக இந்திய தூதுவர் தெரிவித்திருப்பதால் இது தொடர்பில் அரசாங்கம் உடனடிக்கவனம் செலுத்த  வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (02) இடம்பெற்ற துறைமுகங்கள் அமைச்சு மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில்  உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்திற்கு முன்பாக தலைமன்னார் – இந்தியாவுக்கிடையிலான இராமேஸ்வரத்துக்கு கப்பல் சேவை  நடைபெற்றது. அந்த கப்பல் சேவை யுத்தம் காரணமாக நிறுத்தப்பட்டது. மீண்டும் இன்றுவரை அந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. 

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இந்திய தூதுவரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்தேன். அதற்கு அவர் இந்திய அரசினுடைய ஆயத்த வேலைகள் இடம் பெறுவதாகவும் கப்பல் சேவைக்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு இருப்பதாகவும் கூறியிருந்தார். 

இலங்கை அரசும் அதற்கு சாதகமான பதிலை வழங்கி இருப்பதாகவும் எனினும் அதில் பல தாமதங்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். 

எனவே மிக விரைவாக தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையிலான கப்பல் சேவை நடைபெற வேண்டும். அதற்கான முயற்சியை கப்பல்துறை அமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் இணந்து எடுக்க வேண்டும்.

யுத்தம் நடைபெற்றதன் காரணமாக புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்ற ஈழத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு வரமுடியாதுள்ளனர். அவர்கள் விமானம் மூலம் வருவதாக இருந்தால் அவர்களுடைய பொருட்களை கொண்டு வர முடியாது. 

கப்பல் சேவை மூலமாகத்தான் அவர்கள் வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்கள் இங்கு மிக விரைவில் வரவேண்டும். அதற்கு இந்த கப்பல் சேவை பிரதான விடயமாக உள்ளதால் இதனை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

அடுத்ததாக முல்லைத்தீவு முதல் திருகோணமலை,யாழ்ப்பாணம் வரை கடற்கரைகளில் வெளிச்ச வீடுகள் இல்லை. இதனால் மழைக்காலங்களில் மீனவர்கள் கரை திரும்புவது மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. கடந்த வருடம் இது குறித்து அமைச்சரிடம் நான் கேட்டிருந்தேன். 

அமைச்சர் முயற்சி எடுப்பதாக கூறியிருந்தார். அதனை மீண்டும் நினைவு படுத்துகின்றேன். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அந்த வெளிச்சக்கூட்டை அமைத்து தர வேண்டும்.

அதேவேளை மன்னார் மாந்தை தன்னார் ஈச்சிலவத்தை கிராமத்துக்கான குடிநீர்திட்டத்துக்கு அனுமதி வழங்கியதற்காக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவநாணயக்காரவுக்கு எனது நன்றியை தெரிவிக்கின்றேன் என்றார்.