கிழக்கு மாகாண ஆளுநரை – ஸ்ரீநேசன் சந்தித்து பேச்சு !

Capture 6
Capture 6

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை தீர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மேலும் இதன்போது மட்டக்களப்பு மாவட்டம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை ஸ்ரீநேசன் ஆளுநரிடம் பட்டியலிட்டதாக குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு பெரும் பிரச்சினையாக தலையெடுத்துள்ளதாகவும் இதனால் இயற்கைச் சமநிலை சீர்குலைக்கப்பட்டு இயற்கை இடர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீநேசன் ஆளுநரிடம் விவரித்தார்.

மேலும் அந்த சட்டவிரோத மண் அகழ்வு முயற்சிகள் பல சட்டவிரோத ஊழல் செயற்பாடுகளுக்கு அதிகார மட்டத்தில் வழிவகுத்துள்ளதாகவும் ஸ்ரீநேசன் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

அதேவேளை, கிழக்கு மாகாண நிர்வாகத்தின் கீழ் வரும் மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர், அதனோடு இணைந்த ஆளணியினரின் பற்றாக்குறை தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஸ்ரீநேசன் ஆளுநர் அனுராதாவிடம் வலிறுத்தினார்.

மேலும், மேய்ச்சல் தரை இல்லாத குறைபாடு, காட்டு யானைகளைத் தடுக்கும் வேலியின் தேவைப்பாடு, அரச கூட்டுத்தாபன திணைக்களங்களில் கடைப்பிடிக்கப்படும் சமநிலையற்ற வளப்பகிர்வுகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதலின் அவசியம், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஸ்ரீநேசன், ஆளுநர் அனுராதாவிடம் சுட்டிக்காட்டி அவற்றுக்கும் பொருத்தமான தீர்வுகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.