இருதரப்பு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை!

1617935557 Fisherman 2
1617935557 Fisherman 2

தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர, இருதரப்பு மீனவர் சங்கங்களுடன் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 68 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இருதரப்பு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ள தமிழக மற்றும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளின் பெயர் பட்டியலை இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன், பேச்சுவார்த்தைக்கான உத்தேச திகதியை தெரிவிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு கோரியவாறு, விரைவில் தமிழக மீனவ பிரதிநிதிகளின் பட்டியல் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதியாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை கூட்டு செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இரு நாட்டு மீனவர்களுக்கிடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.