பேராயர் டெஸ்மண்ட் டுட்டு உலகில் அநீதிகளுக்கு எதிராக உழைத்தவர் – த.தே.கூ

tna 1
tna 1

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றிய அவர் நீதியும் கருணையும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல: பிரிக்க முடியாத முழுமையின் இரு அங்கங்கள் என்பதைக் காண்பித்தார். 

இயேசுவின் பிறப்பை உலகம் நினைவுகூரும் இவ்வேளையில் நிகழ்ந்த இவரது மரணம் இதனை திரும்பவும் எமக்கு ஞாபகப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளதுடன்,

இலங்கை தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து ‘எல்டர்ஸ்’ குழு வெளியிட்ட அறிக்கைகளை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம்.

தனது ஒரு புத்தகத்தின் தலைப்பான ‘மன்னிப்பு இன்றி எதிர்காலம் இல்லை’ என்பதை பேராயர் டுடூ வாழ்ந்து காண்பித்தார். 

எமது அனுதாபங்களை தென்னாபிரிக்க மக்களுக்கும் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கும் உலக மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.