கட்சி தீர்மானம் எடுத்தால் நாளையே அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் – அமரவீர

Mahinda Amaraweera
Mahinda Amaraweera

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து நாளையே நாம் வெளியேறுவதென்ற தீர்மானத்தை கட்சி முன்னெடுத்தால் சகல அமைச்சுப்பதவிகளையும் துறந்து அரசாங்கத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அத்துடன் அரசாங்கத்தை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறினால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு மட்டுமல்ல சாதாரண பெரும்பான்மையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் நிகழ்கால அரசியல் தீர்மானங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பு அலையொன்று உருவாகிக்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் மக்கள் உள்ளனர். அரசாங்கத்திற்குள் எமக்கு அங்கீகாரம் இல்லை என்பதும் உண்மையே, எமது உறுப்பினர்களை அதிகமாக விமர்சிக்கின்றனர் என்பதும் உண்மையே, அரசியல் தீர்மானங்களில் எல்லாம் அரசாங்கம் தவறிழைத்து வருகின்றது என்ற காரணத்தினால் தான் அரசாங்கத்தில் இருந்து எம்மை வெளியேறுமாறு வலியுறுத்துகின்றனர்.

கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களே எம்மை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்திக்கொண்டுள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டை ஒதுக்கிவிட்டு எம்மால் தனித் தீர்மானம் எடுக்கவும் முடியாது. எனவே சகலரதும் நிலைப்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதே கட்சியின்  பெரும்பான்மை நிலைப்பாடாக அமைந்தால் அதனை ஏற்றுகொள்ள நாம் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் கூறினார்.